புதன், 14 ஆகஸ்ட், 2013

இங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள்…

Blog post image #1
எல்லையில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் படை அடிக்கடித் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்குள்ளும் பதற்றம், கலவரம். ரமலான் பெருநாளின் தொழுகை நேரத்தில் கிஷ்த்வார் பகுதியில் கூட்டமாக சென்றவர்களை உரசியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்காரர்கள் செல்ல அதனால் அடுத்தடுத்து உருவான பிரச்சினைகளால் நான்கு உயிர்கள் பலியாயின. வீடுகளும் கடைகளும் தீவைக்கப்பட்டன. எரிந்ததில் இந்துக்கள் கடைகள் அதிகம். அதனால், முஸ்லிம் கடைகளும் உணவகங்களும் பாதுகாப்பாக இருந்தன என்று நினைத்துவிடவேண்டாம். போலீஸ் படையின் முன்பாகவே அவை எரிக்கப்பபட்டன.
இரண்டு மதத்தினரின் பண்டிகைகள், வழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும் கோலாகலத்தை இழந்தன. மத மோதல்களை அரசியலாக்கி தேர்தல் லாபம் பார்க்க நினைப்பவர்கள் கிஷ்த்வார் வன்முறைகளையும் விட்டுவைக்கவில்லை. நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக அவர்களுக்குக் கிடைத்தது. மதத்தை வைத்து கலவரத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு நடுவே, மத நம்பிக்கை கொண்ட சராசரி மனிதர்கள் அந்தக் கலவரத்திற்கும் பதற்றத்திற்கும் நடுவே ‘மனிதம்’ வளர்த்திருக்கிறார்கள் அதே கிஷ்த்வாரில்.
ரமலான் பெருநாள் கொண்டாடப்பட்ட அதே வெள்ளிக்கிழமையன்று (9-8-2013) அன்று கிஷ்த்வாரில் வசிக்கும் இந்து குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ஆசிஷ் சர்மாவுக்குத் திருமணம். அவரது வீட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மணமகள் சோனியா சர்மாவும் டாக்டர். அவரது வீட்டில்தான் திருமண நிகழ்வு. அங்கேதான் மணமகன் குடும்பத்தார் செல்லவேண்டும். கலவரச் சூழலால் ஆசிஷ் சர்மா குடும்பத்தினர் நகரவே முடியவில்லை. “நரகத்திற்குப் போகும் வாசலுக்குள் நுழைவது போல எங்கள் நிலைமை இருந்தது” என்கிறார் ஆசிஷ் சர்மாவின் அப்பா நரேஷ் குமார் சர்மா.
அவர்கள் வசிக்கும் ஷாகிதி மொகல்லா பகுதியில் சர்மா குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 6 குடும்பங்கள் மட்டுமே இந்துக்கள். 300 முஸ்லிம் குடும்பங்கள். கிஷ்த்வார் நகரத்தின் பல பகுதிகளிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பினரின் கடைகளும் எரிக்கப்படுகின்றன. இந்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட, முஸ்லிம் ஒருவரை உயிரோடு எரிக்கப்பட்டு, கரிக்கட்டையான அவரது உடல் எல்லோரும் பார்க்கும்படி கிடக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், திருமண விழாவை எப்படி நடத்த முடியும் என சர்மா குடும்பத்தினர் யோசிக்கிறார்கள். தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் திருமணச் சடங்குகளை நிறுத்தும்படி புரோகிதரிடம் சொல்கிறார்கள். மணமகள் வீட்டுக்கும் போக முடியாது என்பதால் திருமணத்தையே ஒத்திவைத்துவிடலாம் என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஆனால், அவர்களுடன் இருந்த அக்கம்பக்கத்து முஸ்லிம் குடும்பத்தினரோ, “திருமணத்தையெல்லாம் தள்ளிப்போடக்கூடாது. எங்கள் முஸ்லிம் சமுதாயத்தினரால் உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு” என்று உறுதி அளிக்கிறார்கள். முஸ்லிம்கள் கொடுத்த நம்பிக்கையினால் இந்து குடும்பத்தில், திருமணச் சடங்கு தொடர்ந்து நடக்கிறது. பெண் வீட்டாரையும் தொடர்புகொண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறார்கள்.
இந்து குடும்பத்தின் திருமண நிகழ்வுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடப்பதற்காக முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் பாதுகாவலாக இருந்து, மாப்பிள்ளை ஊர்வலத்தை நடத்திச் செல்கிறார்கள். அதன்பிறகு, போலீஸ் பாதுகாப்பும் அந்த ஊர்வலத்திற்குக் கிடைக்கிறது. கிஷ்த்வாரில் நடந்த கலவரம் பற்றிய தகவல் பரவிக்கொண்டிருந்ததால் பல உறவினர்களும் நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும், முஸ்லிம் நண்பர்கள் கூடவே இருந்தனர். குறிப்பாக, சர்மா குடும்பத்துப் பெண்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என அவர்களை அக்கம்பக்கத்து முஸ்லிம் குடும்பத்தினர் கவனமாகப் பாதுகாத்தனர்.
இந்து-முஸ்லிம் மத மோதல் நடந்துகொண்டிருந்த சூழலில், முஸ்லிம்களின் பாதுகாப்புடன் ஓர் இந்துக் குடும்பத்தின் திருமணம் எவ்வித சிக்கலுமின்றி இனிதே நடந்து முடிந்தது. மணமகள் வீட்டில் திருமணம் முடிந்து, அடுத்த 24 மணிநேரத்தில், கலவரம் ஓயாதநிலையிலும் புதுமணத் தம்பதிகள், மணமகன் வீட்டிற்கும் பாதுகாப்பாகத் திரும்பினர். அப்போதும் அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் முஸ்லிம்கள்தான்.
உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவரும் மாவட்ட சுகாதார அதிகாரியுமான டாக்டர் வஜித் முகத்தில் பெருமிதம். “எங்களுக்கு நரேஷ்குமார் சர்மாவும் ஒரு சகோதரர்தான். அவரது மகன் ஆசிஷ் சர்மாவும் எங்களுக்கு மகன்தான். எங்கள் குடும்பத்து நல்லது கெட்டதுகளில் அவர்களும் அவர்களது குடும்பத்து நல்லது கெட்டதுகளில் நாங்களும் இத்தனை காலமாக ஒன்றாக கலந்துகொண்டிருக்கிறோம். அவர்களும் நாங்களும் ஒரே மொழியைத்தான் பேசுகிறோம். ஒரே வித்தியாசம், அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். நாங்கள் மசூதிக்குப் போகிறோம். ஆனால் இருவருமே கடவுளை வழிபடத்தான் போகிறோம். யாராலோ தூண்டப்படும் வன்முறையால் எங்கள் உறவு பாதிக்குமா? நாங்கள் எப்போதும் சகோதரர்கள்தான்” என்கிறார் நம்பிக்கையான குரலில்.
மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், மதவெறியர்களுக்கு நடுவிலும்…
(நன்றி- THE HINDU)

கருத்துகள் இல்லை: