வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தமிழரின் கலாசார சீரழிவும் விழிப்புணர்வும் - தமிழீழத்தில் இருந்து வேந்தன்







தமிழரின் கலாசார சீரழிவும் விழிப்புணர்வும் இப்பரந்து பட்ட உலகில் கோடானகோடி மக்களில் பல இனங்கள் காணப்படுகின்றது. அதில் தமிழ் இனம் தனக்கென்று ஒரு தனியான பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு மிளிர்கின்றது. அதேவேளை ஒவ்வோரினமும் பல தேவைகள் போராட்டங்கள் என்பவற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் அவர்களின் வாழ்வியலும் வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே போகிறது. வாழ்வியல் என்பது கலை,கலாசாரம்,பண்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.வாழ்வியல் முறை என்பது வாழ்வியல் அம்சங்களை எவ்வாறு பின்பற்றி வாழ்தல் என்பதாகும். ஆனால் கலாசாரம் என்பது ஒவ்வொரு நாட்டவருக்கும் சமூகத்திற்கும் தனித்தனியே காணப்படுகின்றது. நான் எனது குடும்பம் என்பதை விடுத்து ஒவ்வொருவரும் எமது நாடு எமது கலாசாரம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கலாசாரம் இருப்பது போல தமிழர்களுக்கு என்று ஒரு தனித்தன்மையான கலாசாரம் பண்பாடு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் தமிழ் கலாசாரம் பின்பற்றுவதில் முதலிடம் பெறுவது தமிழீழம் எனப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆகும். இப்பகுதி மக்கள் முப்பது வருடகால யுத்தம்,அழுகை,கதறல்,ஒப்பாரி,இழப்பு சேதம் என துன்பியல் வாழ்வை கடந்து மற்றுமொரு பரிணாமத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர்,எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த வண்ணம் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு இனிவரும் காலங்களை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தயாராகின்றது நம் தமிழ் சமூகம். கடந்த முப்பது வருட காலத்தில் இளையசமுதாயத்தினரிடையே நல்லதொரு வழிகாட்டலும், ஒரே கட்டுப்பட்டின் கீழ் இருந்ததாலும் மக்களிடையே ஒருவித பயம் இருந்ததாலும் கலாசாரம்,பண்பாடு,விழுமியங்கள்,வாழ்வியல் அம்சங்கள் என்பன நீண்ட காலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்நிலை தற்போது பல காரணங்களால் விடுபட்டதன் விளைவாக அரச சக்திகளின் உந்துதலால் யாருக்கும் தெரியாமல் எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்படும் பிரச்சனையாக கலாசாரா சீரழிவு என்னும் பிரச்சனை காணப்படுகின்றது.

இக்கலாசார சீர்கேடானது தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள்,இணையத்தளங்கள்,தொலைபேசி,மாணவரிடையே காணப்படும் அதிக பணப்புழக்கம்,வெளிநாட்டவரின் வருகை என்பவற்றாலேதான் இக்கலாசாரம் வேகமாக அழிகின்றது, ஒரு சிறு பிள்ளையை கூப்பிட்டு உன் வயது என்ன? உங்க வீடு விலாசம் என்ன? என்று கேள்வி கேட்டால் தெரியாது என்று பதில் சொல்லும். அதே பிள்ளையிடம் உங்க வீட்டு தொலைபேசி இலக்கம் என்ன? Facebook என்ன? Skype Address என்ன? என்று கேட்டல் பதில் சொல்லும் இதுதான் நம் தமிழரின் தற்போதைய பண்பாடா? தற்போது மக்கள் தொகையைவிட தொலைபேசி பாவனையே அதிகமாக காணப்படுகின்றது.

பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக வெளிவிடப்படும் செய்திகளையும்,படங்களையும் பார்ப்பதுடன் இன்றைய இளைஞர் அதன்வழியே தாமும் நடக்க முற்படுகின்றனர். Face book மூலம் காதல் ,திருமணம் எனத்தொடங்கி பணத்தை வீணடிக்கின்றனர Phone மூலம் மாணவரின் கல்வி பெரிதும் பதிப்படைகின்றது. பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு உடன் போய் ஆசிரியர்கற்பிப்பதையே பதிவு செய்து கொள்கின்றனர். இதனை பெற்றோரும் கவனிப்பதில்லை ஆசிரியரும் கவனிப்பதில்லை. சிலருக்கு Phone இல்லாத வாழ்வே இல்லை என்றாகிவிட்டது. இவர்கள் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் Internet - Phone இல்லாமல்தான் வாழ்ந்தார்கள் அப்போது இவர்களால் வாழ முடியாமல் போனதா? Internet - Phone தற்போது போன்றவற்றால் இளைய தலைமுறையினருக்கு பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு பள்ளி மாணவர் இடையே கூட இந்தப்பாலியல் பிரச்சினை காணப்படுகின்றது. இதனால்தான் பாலியல் பிரச்சனை தற்போது அதிகரிக்க காரணமாகின்றது. எனவே தமிழர்களாகிய நாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தோம் என்பதை மறக்க கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் இலங்கையில் ஒரு கட்டுப்பாடற்ற நிலை காணப்படுவதனை எடுத்துக்காட்டுகின்றது. ஈழத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விநிலையங்களை சுற்றி அமைந்துள்ள மதுபானக்கடைகள் காணப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லையா? மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்கசென்று மாலைநேர வகுப்பு என்று கூறிவிட்டு மதுபானக்கடைகளில் நிற்பதனை காணமுடிகின்றது. இதனைவிட சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடித்தலுக்கு ஆளாகின்ற தன்மையினைக்கான முடிகின்றது. சிறுவர்களுக்கு சிகரட் விற்க மாட்டோம் என்று போட்டுவிட்டு கடையின் உட்பகுதியில் சிகரட் பிடிக்க யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு. ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான கடைகளில் புகைப்பிடிக்க இடம் ஒதுக்கியிருப்பதனை காணலாம். இந்தப்பழக்கத்துக்கு பல்கலை மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் பெருமலவிற்கு உட்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இதனை தூண்டி விடுவது எம்மை அளிக்க நினைக்கும் சிங்களத்தின் தீய சக்திகள் என்பதனை நாம் உணர்ந்து எமது விடுதலையை வீச்சாக்க கூடியவகையில் ஈழத்து தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் புரிந்து செயற்படவேண்டும்.

கலாச்சார அறத்தில் முக்கிய இடமாக விளங்குவது நம் ஆடைக்கலாச்சாரமாகும். இந்த உலகிலே எல்லோரும் மெச்சத்தக்க ஒரு கலாசாரத்தை நாம் கொண்டுள்ளோம். ஆண்கள் வீட்டயும் சால்வையும் . பெண்கள் சேலை அல்லது நீளப்பாவாடை சட்டை அணிவதே நம் கலாச்சாரம் ஆகும். ஈழத்தில் ஒரு வீதமானவர்களே எம்பன்பாட்டு ஆடைகளை அணிந்து செல்கின்றனர் என்றால் மிகுதியானவர்கள் என்னசெய்கின்றனர்? வெளிநாட்டவரின் கலாச்சாரத்தையும், தொலைக்காட்சி நாடகங்களையும் பார்த்து அதன் படி வாழவேண்டும் என்று நினைப்பது மிக முட்டாள்தனமான செயலாகும். இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாகும். இப்பெண்களுக்கு வந்த துணிச்சல் என்னவென்றால் தற்போது விடுதலைப்புலிகளின் செயற்பாடு வெளிப்படையாக இல்லை என்ற துணிச்சலே ஆகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழீழத்தில் எந்த ஒரு இடத்தில் கூட விபச்சாரம் இடம் பெற்றதாக வரலாறு இல்லை. தற்போது சிங்கள அரசின் திட்டமிட்ட செயலால் எங்கு பார்த்தாலும் விபச்சாரமும் களியாட்ட நிகழ்வுகளாகவுமே காணப்படுகின்றது.

கடந்த முப்பது வருட காலத்தில் மக்கள் பல துன்ப நிகழ்வுகளை அனுபவித்தாலும் கூட நின்மதியான, சுதந்திரமான, கட்டுப்பாடான வாழ்வே வாழ்ந்தனர். இரவிலும் ஒரு பெண் தனியாக வீதியில் பயணம் செய்யக்கூடிய நிலையே காணப்பட்டது. ஆனால் தற்போது பெண்கள் பகலிலும் கூட தனியாக வீதியில் செல்ல முடியாத நிலமை காணப்படுகின்றது. இதற்கு காரணம் இன்றைய அரசியல் சூழ்நிலையே ஆகும். இன்றைய இளைஞர்கள் தொலைபேசியில் சிங்கள மொழிப்பாடல்களையும்,பாலியல் ரீதியிலான படங்களையும்,சேமித்துக்கொண்டு வீதியில் சுதந்திரமாக திரிகின்றனர், இவ்வாறு இளைஞர்களும் யுவதிகளும் மாற்றமடைய பெற்றோர்கள் அவர்களுக்கு வழங்கும் அதிகமான சுதந்திரம், கொடுக்கப்படும் அதிக பணம், இணையத்தளம், தொலைபேசி போன்ற வசதிவாய்ப்புகளும் வெளிநாட்டவரின் வருகையும் காரணமாகின்றது.

இதனால் பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள மதுபானக்கடைகளிற்கு தடைவிதிப்பதுடன், கடைக்கென சில கட்டுப்பாடுகளையும், வெளிநாட்டவர் இங்கு வரும்போது அவர்கள் நம் நாட்டுக்கேற்ற வகையில் கலாசாரமாகவும் பண்பாடாகவும் உடையணியவும் கட்டுப்பாடுகள் விதித்து நாட்டை பழையபடி கட்டுப்பாடான நிலைக்கு கொண்டு வர உரியவர்கள் முயற்சிக்க வேண்டும். இவற்றுக்கென ஒரு தலைமைத்துவம் இல்லாமையே காரணம். இவ்வாறான நல்லதொரு தலைமைத்துவத்தினை ஏற்படுத்தி கலாசார நடைமுறைகளை நோக்கிற் கொள்ள பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்விமான்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் அரசதரப்பினரும் உட்பட அனைவரும் பேதமின்றி ஒன்று சேர்ந்து கலாசார பிறழ்வை தடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் எப்படி வாழ்ந்தோமோ அதே கலாசார, பண்பாட்டோடு வாழ்வதற்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்.

தமிழீழத்தில் இருந்து வேந்தன்

கருத்துகள் இல்லை: