வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சீனாவின் காலனித்துவமாக சிறீலங்கா மாறுகின்றதா?

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அதுமட்டுமன்றி சிங்களப் படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு 198 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவும் முடிவுசெய்துள்ளது.
அத்துடன் சிறீலங்காவுடனான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இராணுவ உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்திலும் வடக்கு, கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் கட்டமைப்புக்களை மேம்படுத்த சீனா உதவுவதற்கு முன்வந்துள்ளமையானது பேரதிர்ச்சியைத் தரும் ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.
இதேவேளை சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை சிறீலங்காவிற்கு பயணம் செய்யவிருக்கின்றார். ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டு கொழும்பு செல்லும் சீனபாதுகாப்பு அமைச்சருடன், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் செல்லவுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி 2002 தொடக்கம் 2007 வரை சீன இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும், பின்னர் சீன மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
இவரது பயணத்தின் நோக்கம் இருதரப்பு ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதே என்று கூறப்படுகின்றது. இதேவேளை, சீன மக்கள் கொங்கிரசின் உதவித் தலைவர் யூ பங்கோ உட்பட 96 பேர் கொண்ட குழுவொன்றும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி இலங்கைக்கு செல்லவுள்ளது. இந்தக் குழுவினர் வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளைச் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா பாரிய போரைத் தொடுத்து தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது, சிறீலங்கா இராணுவத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவி அதனைப் பலப்படுத்தியது சீனா. தற்போது போர் முடிவுற்றதன் பின்னரும் சிறீலங்கா இராணுவத்தைப் பலப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கின்றது. சீனாவின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கும் நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்கின்றது. ஏற்கெனவே திருமுறிகண்டியில் நான்காயிரம் ஏக்கருக்கு மேல் எடுக்கப்பட்டு, அங்கு சீன உதவியுடனான இராணுவக் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம் நிறுவப்பட்டுள்ளதுடன், கடற்படையினருக்கான குடியிருப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது சீன அரசாங்கம் வடக்கு, கிழக்கில் இராணுவத்திற்கான கட்டுமானங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவதற்கும் நீண்டகால அடிப்படையில் இந்தக் கடனுதவி வழங்கப்படுகின்றது.
இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் அதாவது இருபது டிவிசன் இராணுவத்தினர் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் இருப்பதாக நம்பப்படுகின்றது. இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவதன் மூலமும் அவர்களது குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலமும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலமும் வடக்கு, கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றி பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களிலேயே சிறுபான்மையினமாக்கும் முயற்சிக்கு சிறீலங்கா அரசாங்கம் வித்திடுகின்றது. சீன அரசாங்கம் திபெத்தில் சீனர்களைக் குடியமர்த்தி எவ்வாறு திபெத்தியர்களைச் சிறுபான்மையாக்குகின்றதோ அவ்வாறே இலங்கையிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைச் சிறுபான்மையாக்க முயற்சிக்கின்றது’ என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியிருக்கின்றார்.
சிறீலங்காவிற்கு சீனா வழங்கும் இந்தக் கடன்களும், உதவிகளும் சிங்களவர்கள் மீதான கரிசனையினால் வந்தல்ல என்பது சீனாவின் இந்து சமுத்திர வல்லாதிக்கப் போட்டியில் உருவாகியுள்ள ‘முத்துமாலைத் திட்டத்’தைப் புரிந்து கொண்டவர்களுக்குப் புரியும். ஒரு நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவருவதற்கு அவர்களுக்கு கேட்கும் போதெல்லாம் கடன் கொடுத்து கடன்காரர்களாக்கி தாங்கள் சொல்லும்படியெல்லாம் அந்த நாட்டை செயற்பட வைப்பது அமெரிக்காவின் பாணி என்பதை அந்நாட்டின் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரே வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்.
அது முடியாமல் போனாலேயே அடுத்த கட்டமாக அமெரிக்கா அந்த நாட்டைத் தமது கட்டிற்குள் கொண்டுவர தாக்குதல் நடவடிக்கையில் இறங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று உலகின் பெரும்பாலான நாடுகள் காலனித்துவ நாடுகள் என்ற கட்டுப்பாட்டிற்குள் இருந்து விடுபட்டிருந்தாலும், பொருளாதாரம், அச்சுறுத்தல், நட்பு என்ற வெவ்வேறு வடிவங்களில் பலமான நாடுகள், பலமற்ற நாடுகளைத் தமது ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பது தொடரவே செய்கின்றது.
இப்போது அவ்வாறான ஒரு மறைமுக காலனித்துவ ஆதிக்கத்திற்குள் சிறீலங்கா சென்று கொண்டிருக்கின்றது. பொருளாதார பலத்தின் மூலமாக சிறீலங்காவை தனது பிடிக்குள் சீனா மெல்ல மெல்ல மீண்டெழ முடியாதளவிற்கு கொண்டுசென்று கொண்டிருக்கின்றது. சீன அரச, தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு என்ற பெயரில் ஆதிக்கத்தை அதிகரித்துக்கொண்டிருக்க, சீன அரச மற்றும் தனியார் வங்கிகள் சிறீலங்கா அரசுக்கு கடன்களை அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் முழு வருமானத்தில் 96 வீதமான பணம் கடனைச் செலுத்துவதற்கே மகிந்த அரசு பயன்படுத்திவருகின்றது என்று அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியிருந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
உலகில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு வல்லரசாக கருதப்படும் சீனா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட ஒரு நாடு. பௌத்த மதத்தினர் என்பதற்கும் அப்பால், வீட்டோ அதிகார பலம் இந்தியாவை விட சீனாவின் நட்பு சிறந்ததென்ற சிந்தனையை சிறீலங்காவிற்குள் விதைத்திருக்கின்றது. இதனாலேயே இந்தியாவுடனான பொருளாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு, எப்போதும் சீனாவுடன் தனது வர்த்தகத்தை அதிகரித்து, அந்நாட்டுடனான தனது உறவைப் பலப்படுத்த சிறீலங்கா முனைந்துகொண்டிருக்கின்றது.
நுளம்பிற்கு பயந்து வீட்டைக் கொழுத்தியவன் கதையாக, தமிழர்களை இலங்கைத் தீவில் இருந்து இல்லாமல் செய்வதற்காக சீனாவின் பிடிக்குள் தன்னை இழந்துகொண்டிருக்கின்றது சிறீலங்கா. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தவன் கதைபோன்ற இந்த மகிந்த சிந்தனை கோட்பாடு, நாட்டை சீனாவின் காலனித்துவமாக மாற்றிக்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: