வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தமிழர்களை வலிந்து இராணுவத்தில் இணைப்பதன் பின்னணி என்ன? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்.


வடக்கில் தமிழ் இளைஞர
யுவதிகள் மிக அவசர அவசரமாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இராணுவத்தினரின் இந்நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல், பகட்டு வார்த்தைகளுக்கு வசைப்படும் ஒரு சிலரால் தமிழர்களுடைய போராட்டம், உரிமைக்கான குரல், அத்தனையும் நசுக்கப்படும் அல்லது ஏளனப்படுத்தப்படும் நிலை உருவாகப்போகின்றது.



இந்நிலையில் தொடர்ந்தும் எங்கள் தமிழ் தலைமைகளும், தமிழ் மக்களும் மௌனம் காப்பது மேற்கூறிய நிலைகளை மேலும் துரிதப்படுத்தவே போகின்றது. மற்றபடி மலினப்படுத்தப் போவதில்லை என்பதை உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து தமிழர்களும் புரிந்து கொள்வதே சமகாலத்தேவை. சிறீலங்கா அரசு தன்னிடமுள்ள மிகப்பெரிய இராணுவ இயந்திரத்தை கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் தமிழின அழிப்பில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த அப்பழுக்கற்ற உண்மையினையே நாம் 2006ம் ஆண்டிலிருந்து வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான படுகொலைகள், போர்க்குற்றங்கள், கடத்தப்படுதல், காணாமல்போதல் போன்றவற்றிலிருந்து நிதர்சனமாகக் கண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு தமிழர் தாயப் பகுதியிலிருந்து படையினர் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்ற அடிப்படை வாதத்தை யுத்தத்தின் பின்னர் நாம் ஆணித்தனமாக கூறிவருகின்றோம்.

இது உள்ளக சட்ட ரீதியாகவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் நியாயமானதொன்றாக கருதப்படுவதோடு, சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஒரு கட்டத்தில் சர்வதேச நாடுகளால் அல்லது மனிதவுரிமை அமைப்புக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையும் ஏற்படலாம். இந்தவிடயம் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் நன்றாக புரிந்திருக்கின்றது. எனவே இந்த இடத்தில் தமிழ் இளைஞர், யுவதிகளையும் படையில் இணைத்துக் கொண்டு, வடக்கிலிருப்பது சிங்கள இராணுவம் கிடையாது.

இராணுவத்தில் தமிழர்களும் உள்ளனர் எனும் தோற்றப்பாட்டை உருவாக்க நினைக்கும் அரசாங்கம் அதன் மூலம் வரையறையற்ற பல சாதகங்களை அடையப்போகின்றது. இதில் மிக முக்கியமானதும், மிக ஆபத்தானதுமான ஒரு விடயத்தில் தமிழர்கள் நாங்கள் அக்கறையற்றிருப்பதுபோலத் தோன்றுகின்றது. அது எங்கள் உரிமைப்பிரச்சினை. நாம் முன்னரே ஒரு விடயத்தை மிக ஆழமாக பேசியிருக்கின்றோம். அந்த விடயத்தை பலர் அனுபவவாயிலாக கூட அறிந்திருக்கின்றார்கள். ஆனாலும் மீண்டும் இந்த இடத்தில் அதை அலசிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னால் சர்வதேச ரீதியாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு எழுந்துள்ள நெருக்கடியென்ன என்பது எங்கள் அவைருக்குமே தெரியும்.

இந்த நெருக்கடி நிலையிலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக மகிந்த அரசாங்கம் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பதையும் நாங்கள் அறிகின்றோம். அவ்வாறு தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் பயன்படுத்தும் உபாயங்களில் ஒன்றே இராணுவத்தில் தமிழ் இளைஞர், யுவதிகள் இணைக்கப்படுவதன் பின்னாலுள்ள மிக முக்கியமான காரணி. எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்காவிற்கு மீண்டும் ஒரு தலையிடி காத்திருக்கின்றது என்பது அவைருக்கும் தெரியும். இந்த தலையிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சிறீலங்கா அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏது நிலைகளை தோண்டியெடுத்து பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது.

எனினும் கடுமையான மக்களுடைய அழுத்தங்களால் கூட்டமைப்பு அந்த விடயத்தில் அதிக முக்கியத்தும் எடுத்திருக்கவில்லை என நினைக்கின்றோம். இதனையடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என நேரடியாக வேண்டுகோளை விடுத்ததுடன், அது மட்டுமல்லாமல் சிறீலங்காவுடன் இப்போது பேரம்பேசும் நிலையிலுள்ள இந்தியா போன்ற நாடுகளின் மூலமும் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை வலுவாகக் கொடுத்தது.

ஆனால் அதை நிறைவேற்றிக் கொடுக்கக் கூட்டமைப்பால் முடியவில்லை. காரணம் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கெடுத்துக் கொள்வதற்கு உள்ளக ரீதியாகவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. எனவே இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கைக்குள்ளேயே ஒரு பொறிமுறையுள்ளது என சர்வதேசத்திற்குக் காண்பிக்க அரசாங்கம் தீட்டிய திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

எனவே மீதமாக இருந்த மிக எளிமையான வழி தமிழ் இளைஞர், யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டு அதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு தேவையற்றது என்ற தோற்றப்பாட்டை உருவாக்க அரசாங்கம் தனது இராணுவ இயந்திரத்தை களமிறக்கியிருக்கின்றது. இதேவேளை நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று இந்த விடயம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து அரசை காப்பாற்றும் என்பதற்கு மேல், ஒரு கட்டத்தில் இன்று படையில் இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் பெண்கள் சிங்கள சிப்
பாய்களை மணந்து கொள்ளும் ஒரு அபாயகரமான நிலையும் ஏற்படவே போகின்றது. ஏனெனில் படையில் இணைந்து கொண்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் தயாரில்லை. ஆனால் சிங்கள சிப்பாய்கள் எப்போதோ தயாராக்கப்பட்டு விட்டார்கள். எனவே இது நடந்தேயாகப்போகின்றது.

இதனடிப்படையில் ஒரு கட்டத்தில் இனக்கலப்பு வடக்கில் ஏற்படப்போகின்றது. இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் நாங்கள் பார்க்கவேண்டும். அதாவது இன்று படையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டமக்களே. 1973ம் ஆண்டு தொடக்கம் சிங்கள இனக்கலவரங்களால் துரத்தப்பட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே இந்த இராணுவத்திற்கான ஆட்ச்சேர்ப்பு நடக்கின்றது. இவர்கள் காலம் காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இன்றைக்கும் வாழ்நிலத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடிக்கொண்டிருந்த மக்கள். எனவே இந்த மக்களை மிக எளிதாக படையினரால் முளைச்சலவை செய்ய முடிந்திருக்கின்றது.

உதாரணத்திற்கு ஒலி பெருக்கி மூலம் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கின்றோம் வாருங்கள் என கூவி அழைத்தபோது அந்த அறிவிப்பிற்கு செவிசாய்த்து படையில் பிள்ளைகளை இணைத்த மக்கள், அதற்காக இந்த மக்களிடம் உணர்வில்லை என்று பொருளாகாது. மிக உன்னதமான உணர்வுள்ள மக்களும் இங்குதானிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் செய்கின்ற தவறுகள் ஒரு சமுகத்தையே சார்ந்து விடுகின்றது என்பதையே நாங்கள் இங்கு குறிப்பிடுகின்றோம். இந்த இடத்தில் எங்கள் புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழ் அரசியல் தலைமைகளிடமும் பாரியளவு குறைபாடுகளை நாங்கள் கண்டுணர்கின்றோம்.

அதாவது யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த பெருமளவு நிதி உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை சென்றடைந்திருக்கின்றதா என்ற கேள்விக்கு நிச்சயமாக யாரிடமும் பதில் கிடைடாயாது. உண்மையில் மக்களுக்கு வந்த நிதி மக்களை உரிய முறையில் சென்றடையவில்லை. புலம்பெயர் தமிழர்களும், தாயகத்திலுள்ள தமிழர்களும் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரியிறைத்தனர். வாரி இறைக்கப்பட்ட பணம் வயிறு பசிக்கக் கிடந்தவர்களைச் சென்றடையவில்லை என்பது எம்முடைய வாதம். இதற்கு நிறையவே உதாரணங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம். எனவே புலம்பெயர் தமிழர்கள் தங்களிடமிருந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கூடாக மிக நம்பிக்கையான தரப்புக்களைக் கொண்டு உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் வறுமையினால் சமுகப்பிறழ்வு நடத்தைகளுக்குள்ளாகின்றன. அல்லது இழுத்தபாட்டிற்கு செல்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்தத்தில் இந்த இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் விடயம் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக மோசமானதொரு விடயமாகும். ஆனால் இதைத் தமிழர்கள் நினைத்தால் மாற்றியமைக்க முடியும்.

அல்லாதுபோனால் நிச்சயமாக இந்த இனம் ஒரு நிம்மதியான, சுதந்திரமான இனமாக வாழ்வதற்கு மீண்டும் ஒரு பேரவலத்தை அனுபவிக்கவேண்டும். அப்போதும் சந்தேகம்தான், ஏனெனில் அப்போதும் இப்போதுபோல் மோசமான அரசியல்வாதிகள் இருந்தால் என்ன செய்ய முடியும். மீண்டும் சொல்கிறோம் தமிழர்கள் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: