வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை

தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….!
எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை.

கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது.
சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது.
இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள் முன்னாள் போராளிகளே!, முக்கியமாக பெண் போராளிகள் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடையம்.
கிட்டத்தட்ட முப்பது வருடத்திற்கும் மேலாக அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிய எம் மக்கள் தற்போது மிகவும் கொடூரமான அடக்கு முறைக்கு முகம் கொடுத்துக் கொண்டு உள்ளார்கள்.
சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிப்போரில் உறவுகள் உட்பட உடைமைகளையும் இழந்து மாற்றி உடுத்த துணியின்றி உயிர் தப்பியவர்கள் இன்று அந்த உயிரை தக்கவைப்பதற்காக பல வடிவங்களில் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களில் பெண்கள் தலைமையேற்றுள்ளனர். காரணம் அந்தந்தக்குடும்ப ஆண்கள் கொல்லப்பட்டு விட்டனர், கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர், அல்லது தடுப்பு முகாம்களில் சித்திரவதையை அனுபவிக்கின்றனர்,அல்லது கடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.
இந்த வரிசைகளில் முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளது.
அவர்களது கணவன்மார் போரில் மாவீரர்கள் ஆன நிலையில் அவர்களும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
அடுத்த நாள் உணவுக்கும்,குழந்தைகளின் கல்விக்கும் அன்றாடம் அந்தக்குடும்பம் உணர்வையோ அல்லது உடலையோ எதையோ ஒன்றை இழக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாளுக்கு நாள் வறுமையின் உச்சகட்டத்தில் போராடிக்கொண்டிருக்கும் இந்தக்குடும்பங்களை இனம் கண்டு சிங்களவன் அதன் கருவறை மட்டும் அழிக்கத்துடிக்கின்றான்
இவ்வாறான குடும்பங்களையோ தனிமையில் வாடும் விதவைகளையோ எந்த சமூக அமைப்புக்களும் கண்டுகொள்வதில்லை.
ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு தாம் இருப்பதை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள், அவ்வளவு தான்.
அறிக்கை விடுவதைத்தவிர இந்த அமைப்புக்களினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆண்துணையற்ற குடும்பங்களுக்கு எந்தப்பயனும் இல்லையென்றே கூற வேண்டும்.
இன்று நாளுக்கு நாள் தமிழ் உறவுகளின் சடலங்கள் சிங்கள இராணுவம் குடிகொண்டிருக்கும் தெருக்களிலும்,கிணறுகளிலும் இருந்து மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த சடலங்கள் மீட்கப்பட்டதும் சிறிலங்கா காவல்துறை ஒரு அறிக்கையை விடும் இறந்தவர் மன நிலை பாதிக்கப்பட்டவர்என்று, இராணுவ முகாம் பகுதிகளில் இருந்து அந்த உயிரற்ற உடலங்கள் மீட்கப்படும் போது மட்டும் பெண் சடலமோ அல்லது ஆணின் சடலமோ உடனடிக் காரணமாக மேற்குறிப்பிட்டவாறே அமைந்துள்ளதை தினம் செய்திகளில் அறியலாம்.
தமிழ் மக்களை சிங்களவன் அழிப்பது போதாதென்று தமிழரின் அடையாள அரசியல்கட்சிகளும் தமக்குள் ஒற்றுமையை இதுவரையில் நிலை நாட்டாததால் அவர்களினாலும் இன்றைய தமிழரின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு சீரான அரசியல் தூரநோக்கு கொண்ட தெளிவு இருக்குமாயின் இன்று தமிழர்தேசத்தில் இவ்வாறான காலாசார சீரழிவோ, கடத்தல்,துன்புறுத்தல்,சட்டமுறனான கைது போன்ற எந்த நடவடிக்கைகளையும், சர்வதேசத்தின் முன் தற்போது போர்க்குற்றச்சாட்டின் விழிம்பில் நிற்கும் இந்த அரசால் மேற்கொள்ளவே முடியாது.
இந்த அரசியல் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் நடக்கும் அடக்கு முறைகள் எதையும், தட்டிக்கேட்க அஞ்சுவதை சமகாலத்தில் கூடுதலாக காணக்கூடியதாக உள்ளது.
சாகத்துணிந்தவன் மட்டுமே தலைவனாக முடியும்இது முன்னோர் வாக்கு.
ஆனால் இன்றைய தமிழரின் அரசியல் தலைமைகளின் நிலையென்ன என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
அடக்கு முறை எங்கு நடக்கின்றதோ அங்கு நீ எரிமலையாய் வெடித்து விடு.இது புரட்சியாளனின் வாக்கு.
எது எப்படியோ எல்லா பக்கங்களினாலும் பாதிக்கப்படுவது எமது மக்களே!
இன்று வன்னி பெருநிலப்பரப்பில் கணவனையிழந்து விதவையாக வாழும் பெண்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது.
இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தாயக விடுதலைக்காக போராடி மாண்டவரின் குடும்பங்களே!.
இவ்வாறான குடும்பங்களில் விதவைகளாக இருக்கும் பெண்களிடம் தமது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சிங்கள அரச இராணுவ சிப்பாய்கள் நாளுக்கு நாள் முயன்ற வண்ணமே உள்ளனர்.
சில இடங்களில் அவர்களின் முயற்சி அவர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
பல குடும்பங்களில் இந்த சிங்களக் காடையரின் இவ்வாறான முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் கடத்தப்பட்டு,காணாமல் போயுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று புலம்பெயர் உறவுகள் இவர்களுக்கென உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
ஆனால் இந்த உதவிகள் சரியாகச் சென்று அடைகின்றதா…?அல்லது அது ஒரு நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காக அந்தக்கரங்கள் நீட்டப்படுகின்றதா…?
ஏனனில் அவர்களிடம் இருந்து உதவி பெற்ற குடும்பங்களின் தற்கால நிலை இவ்வாறான கேள்வியை எழச்செய்கின்றது.
நாட்டுக்காக உடல் அங்கங்களில் கந்தகத்துண்டுகளை சுமந்து கொண்டும், உடல் அங்கங்களை இழந்தும்,ஏன் உறவுகள் அனைத்தையும் இழந்து இன்று விதவை என்ற பட்டத்துடன் காமக்கழுகுகளின் பார்வையில் நாளாந்தம் சிக்கித்தவிக்கும் எம் முன்னாள் போராளிகளின் விடிவுக்கு வழிகோலுவதற்கு எத்தனை பேர் தயாராக உள்ளார்கள்!
நிச்சயமாக புலம்பெயர் உறவுகள் இவர்களின் நல் வாழ்வுக்காக கணக்கிடாமல் முன் வந்து உதவி புரிய வேண்டும்!அவ்வாறு இல்லாது தவறுவார்களாயின் இன்று நிகழ் காலத்தில் நடப்பவற்றுக்கு வருங்காலம் உங்கள் மேல் பழி சுமத்தும்,இதில் உங்கள் எதிர்காலம் இருட்டாக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்று சிறிலங்கா பயங்கரவாத இனவழிப்பு அரசு திட்டமிட்டு நிழல் இனவழிப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டது.
நலிவடைந்து போயுள்ள இந்த விதவை க்குடும்பங்கள்,பெற்றோர்களை இழந்து வயோதிப உறவுகளுடன் வாழும் இளம் பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் இவ்ர்களை இனம் கண்டு உதவி என்ற பெயரில் அவர்களுக்குள் ஊடுருவல் மூலம் தமிழ் இனத்தையே அழிக்கும் இனக்கலப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் வறுமையே!, விடுதலைப்புலிகளின் காலத்தில் வறுமைக்கு இடமேயில்லை.
ஆனால் மிகக்கொடூரமான போரை நடத்திய சிங்கள அரசு தமிழர் தாயகத்தின் மீது இன்று வறுமைப்போரை நடத்தி அவர்களை மீளெளாவண்ணம் அடக்கி ஆண்டு வருகின்றது.
இவற்றையும் விட மிகவும் மனவேதனை தரும் விடயம் செஞ்சோலைப்பிள்ளைகளின் இன்றைய நிலை.
இவர்கள் எந்த உறவுகளும் அற்ற பிள்ளைகள்,இவர்களில் சிலரை சிறிலங்காப்படை தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்தில் போரின் இறுதியில் கைது செய்து, அதிலும் சிலரை விடுதலை செய்தனர்.
ஆனால் இன்று அப்பிள்ளைகளில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் எங்கு சென்றார்கள் என்ற விபரங்கள் எவருக்கும் தெரியாத நிலையில் உள்ளது.
இன்று சில தமிழ் அடி வருடிகள் தமது சுயநலத்துக்காக இவ்வாறான பெண் பிள்ளைகளை சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து மறை முகமாக தமது தேவைகளுக்குப்பயன் படுத்தி வருகின்றனர்.
போரின் பின் தனித்து விடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட இப்பிள்ளைகள் தமக்கான பாதுகாப்பான தங்குமிடம் இல்லாமல்,எவ்வாறான முடிவுகள் எடுப்பது என்று ஒரு சரியான வழிகாட்டல் இல்லாமல் பாதுகாப்பற்ற இடத்தை அவர்களுக்குத்தெரியாமலேயே தெரிவு செய்து விடுவதுடன், காமுகர்களின் காதல் வார்த்தைகளுக்குப்பலியாகி அவர்களால் ஏமாற்றப்பட்டு இன்று சிறிலங்காவின் தென் பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தமிழர்கள் அல்லாதவர்களின் வீடுகளில் அடிமையாக்கப்பட்டுள்ளனர் என்பது எமது இனத்தின் எதிர்காலத்தை முழுமையாகக் குழிதோண்டிப்புதைக்கும் ஒரு மிலேச்சத்தனமான நடவடிக்கையாகும்.
எனவே தமிழீழத்தேசியத்தலைவரால் மிகவும் கவனமாக,சிறந்த பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட செஞ்சோலைப்பிள்ளைகளின் எதிர்காலம் இன்று தவிர்க்க முடியாமல் புலம் பெயர் சமூகத்திடம் உள்ளது.
இன்று தமிழ் மக்கள் அவர்களின் வாழ்வுக்காக பட்டினிச்சாவோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது புலம் பெயர் நாடுகளில் சில தமிழ் முக்கியஸ்தர்கள் தமிழீழத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பற்றிப்பேசுவது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தமிழ் இனம் இன்று தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தாயகத்தில் மிகவும் நெருக்கடியான நிலையில், கொடிய அடக்கு முறைக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கையில், அந்த இனத்தின் இருப்புக்கு வழி செய்யாமல் எதிர்கால தமிழீழத்தில் நான் தான் ஜனாதிபதி, நான் தான் பிரதமர்,நான் தான் அமைச்சர் என்ற போட்டியில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பிரமுகர்கள் அறிக்கை விடுவதானது மிகவும் கேலிக்கூத்தான ஓர் விடையமாகும்.
தாயகத்தில் தமிழினத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் புனித தலமான நல்லூர் ஆலய முன்றலில் படைக்காவலரண் வந்து விட்டது, இனி அங்கு ஒரு குட்டி புத்தர் முளைப்பார், காலப்போக்கில் நல்லூர் கந்தனின் வதிவிடத்தை விட பெரியதொரு விகாரை வளர்ந்து விடும்.
எனவே தமிழர் தாயகத்தில் வறுமையை திட்டமிட்டு உருவாக்கி, எதிர்காலத்தில் என்றைக்குமே தமிழர்கள் வலிமை பெறாத வண்ணம் இந்த சிறிலங்கா அரசு ஒரு நீண்ட கால இனஅழிப்புத்திட்டத்துடன் தனது நடவடிக்கைகளை சரவரச் செய்து வருகின்றது.
தமிழ் மக்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளில் இருந்து மீளவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனவே இவ்வாறான குடும்பங்களை இனம் கண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது புலம்பெயர் உறவுகளின் கரங்களிலேயே உள்ளது.
தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் அவர்களின் ஒற்றுமையின்மையே! எனவே ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்று பட்ட உணர்வே தமிழர்களுக்கான தாயகத்தை அமைத்து தரும்.
கடந்து போன 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் புலம்பெயர் மக்களுக்கான தாயகத்தின் பொறுப்புக்களை உணர்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழ் இனத்துக்காகவும் அதன் உரிமைகளுக்காகவும் உடல்களில் வெடிசுமந்தும், களமாடியும் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட அந்த மகத்தானவர்களின் காத்திரமான கனவுகள் பொய்த்து விடாமல் தமிழ் இனத்தின் இருப்பை நிலை நாட்ட வேண்டிய முக்கிய பொறுப்பு புலம்பெயர் சமூகத்தைச்சார்ந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

கருத்துகள் இல்லை: