சனி, 31 ஆகஸ்ட், 2013

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .

இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .

சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் .

சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.

லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .

கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது


கருத்துகள் இல்லை: