வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எந்த விடுதலைப் புலிப் போராளியும் தனது விடுதலைக்காகத் தமிழ்த் தேசியத்தின் தலை சாய்வதற்குச் சம்மதிக்க மாட்டான்!

ஆம், வந்தேறு குடிகளான வெள்ளையர்கள் அந்த நாட்டின் பூர்வீக் மக்களான தென்னாபிரிக்கரை அடிமைப்படுத்திக் கொடுமைகள் புரிந்தபோது அந்த மண்ணில் பூத்த கறுப்பு வைரம் நெல்சன் மணிடேலா கொதித்தெழுந்தார். நீதிக்கான போராட்ட வடிவங்களெல்லாம் தோற்றுப் போனதால், எதிரிக்குப் புரிந்த வன்முறை வடிவைத் தன் ஆயுதமாக வரித்துக் கொண்டபோது கைதும் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் தனது மக்களது விடுதலையை எவருடனும் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

ஒன்றல்லஇரண்டல்ல… 27 வருடங்களை வெள்ளையின ஆட்சியாளர்களின் கொடும் சிறையில் கழித்தபோதும் அவர் தன் முடிவில் தெளிவாகவே இருந்தார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரது மக்கள் கொதித்து எழுந்தார்கள். அவரது விடுதலைக்காகப் போராடினார்கள். இரத்தம் சிந்தினார்கள். உயிரையும் கொடுத்தார்கள். ஆனாலும், மண்டேலா தனது மக்களது உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதில் அப்போதும் உறுதியாகத்தான் இருந்தார். இறுதியான, ‘மன்னிப்புக் கேட்டால் விடுதலைஎன்ற நிபந்தனையை வெள்ளையின அரசு முன் வைத்தது. ஆனாலும் எனது மக்களின் விடுதலைதான் எனது விடுதலைஎன்றார் மண்டேலா.

விடுதலைப் போராட்ட வரலாறுகள் இப்படித்தான் பல அற்புதமான மனிதர்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. அடிபணிந்தவர்கள் குறித்தும், எதிரியிடம் மண்டியிட்டவர்கள் குறித்தும் வரலாறு கண்டுகொள்வதில்லை. அவர்களைக் கருத்தில் கொள்வதும் இல்லை. மகாத்மா காந்தி, நேதாஜி, சே-குவேரா, பிடரல் காஸ்ரோ என்று விடுதலைக்குப் போராடிய அனைவரும் தங்கள் இலட்சியத்துடன் சமரசம் செய்து கொள்ளாததால்தான் உலகம் அவர்களை இப்போதும் அண்ணாந்து பார்க்கின்றது.

தமிழீழ விடுதலைப் போரில் எங்கள் தேசியத் தலைவர் அவர்களும் அதைத்தான் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அதனால்தான் அற்பமான மனிதர்களின் அஞ்சலிகனவுகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அந்த அற்புத மனிதரின் அரியாசனத்தில் ஏறி அமர ஆசைப்பட்டவர்கள் சறுக்கி வீழ்ந்து சிங்களத்தின் காலடிக்குள் சுருண்டு வீழ்ந்தார்கள்.

எனது மக்கள் எப்போது விடுதலை பெறுகின்றார்களோ, அன்றுதான் எனக்கும் விடுதலைஎன்பதெல்லாம் அவர்களுக்குப் புரியாத மொழி. எனக்கு விடுதலை கிடைக்குமானால், எனது மக்களை நீ அடிமையாக்கிக் கொள்வதற்கு ஆட்சேபணை இல்லைஎன்பதே இந்தப் புதிய மீட்பர்களின் வேதமாக உள்ளது. இதற்காக, சிங்களத்தால் சிறைபிடிக்கப்பட்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்களையும், அவர்களது உறவுகளையும் உசுப்பேற்ற முற்படுகின்றார்கள்.

ஒருவன் குடித்தால் குடிகாரன், எல்லோருமே குடித்தால் அதுதான் கலாச்சாரமாகிவிடும். அதுதான் தற்போது கே.பி.யின் தத்துவமாக வெளிவருகின்றது. 27 வருடம் சிறையில் இருந்து தனது மக்களின் விடுதலையுடன் வெளியே வந்தார் மண்டேலா. கே.பி. சிங்களத்திற்கான தனது சேவைக்குச் சன்மானமாக சிறைக்குள் சிறகுகள் கொடுக்கப்பட்டு, அதனை நியாயப்படுத்துவதற்காக சிறைப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளை சிறை மீட்கும் பெருமாளாக அவதாரம் எடுக்க முற்படுகின்றார். கொலை செய்தவனும் நானே, கொடுமைகள் புரிந்தவனும் நானே, கைது செய்தவனும் நானே, காணாமல் ஆக்குபவனும் நானே என்று சிங்கள அரசே எல்லாமுமாக இருக்கும்போது போராளிகளின் விடுதலை என்பதும் அவர்கள் கைகளிலேயே உள்ளபோது, கே.பி. எதற்காக போராளிகளின் விடுதலைக்கும், தேசிய விடுதலைக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறார் என்பது புரியாத புதிராகவே நீண்டு செல்கின்றது.

விடுதலைப் புலிப் போராளி என்பவன் சமுதாய அக்கறை கொண்டவன். தன்மானம் உள்ளவன். எதிரியிடம் உயிரோடு பிடிபட மறுத்து நஞ்சைக் கழுத்தில் மாலையாக அணிந்தவன். நெருப்பாற்றில் நீந்தியேனும் வரும் பகையின் கதையை முடிப்பவன். அவன் களத்தினுள் நுழையும்போதே மரண தேவதையையும் துணைக்கு அழைத்துச் செல்பவன். அவன் மக்களுக்கானவன். மக்களுக்காக வாழ்பவன். அவன் மக்களுக்காகவே மரணிப்பவன். அவன்தான் விடுதலைப் புலிப் போராளி.

உலக நாடுகள் பலவற்றின் ஆதரவோடு, சிங்களம் நடாத்திய வெறியாட்டத்தில் அந்த விடுதலைப் புலிப் போராளிகளும் சிறைபட்டுப் போனது காலமும் கணிக்காத கொடுமையானது எனடபதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனாலும், எந்த விடுதலைப் புலிப் போராளியும் தனது விடுதலைக்காகத் தமிழ்த் தேசியத்தின் தலை சாய்வதற்குச் சம்மதிக்க மாட்டான். அவர்கள் தேசியத் தலைவரால் வார்க்கப்பட்ட விடுதலை விக்கிரகங்கள். வீணாகப் புழுதியில் வீழ்வதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களும் சிறைக்குள் மண்டேலா போலவே யாகம் செய்வார்கள்.

தென்னாபிரிக்க வெள்ளையர்கள் மண்டேலாவையும், அவரது மக்களையும் விடுவிப்பதற்கு சர்வதேச அழுத்தங்களே காரணமாகும். அன்பாக, அதட்டலாக, மிரட்டலாக ஆரமிபித்த சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்த தென்னாபிரிக்கா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தது. விளையாட்டு மைதானங்களில் கூட அவர்களுடன் இணைந்து விளையாடுவதைப் பாவமாக நினைத்து ஒதுங்கியது. அது, தென்னாபிரிக்க வெள்ளையின அரசை உச்சி மயிர் பிடித்து உருக்கியது போல் நிலை குலைய வைத்தது. தென்னாபிரிக்கா விடுதலை பெற்ற வரலாறு இதுதான்.

சிங்கள தேசத்தின் இன்றைய நிலையும் தற்போது இதை நோக்கித்தான் செல்கின்றது. சீனாவின் வர்த்தகத்திற்கான கடல்வழிப் பாதுகாப்புக் கனவும், இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க கனவும் சிங்கள தேசத்தை தற்காலிகமாகக் காப்பாற்றுகின்ற போதும், சிங்கள அரசு மீது மேற்குலகின் அதிகரித்து வரும் அதிருப்தியும், ஐ.நா.வின் அழுத்தங்களும் சிங்கள தேசம் தன் இனவாதக் கொடுங் கரங்களுடன் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதையே உணர்த்துகின்றது.

இந்த உலக மாற்றங்களினூடாகப் புலம்பெயர் தமிழர்கள் தமக்கான நியாயங்களைத் தேடிக்கொண்டு விடக் கூடாது என்பதற்காகவே, சிங்கள தேசம் கே.பி.யை வைத்து நாடகங்கள் சிலவற்றை அரங்கேற்ற முற்படுகின்றது. எனது மக்கள் எப்போது விடுதலை பெறுகின்றார்களோ, அன்றுதான் எனக்கும் விடுதலைஎன்று நிமிர்ந்து நிற்பதற்கு கே.பி. மண்டேலாவும் அல்ல. அவரை நம்புவதற்கு ஈழத் தமிழர்கள் முட்டாள்களும் அல்ல.

கே.பி. நல்லவரா? கெட்டவரா? என்பதற்கும் அப்பால், கே.பி. கோத்தபாய ராஜபக்ஷவின் கைகளில் சிக்கியுள்ள பொன் முட்டையிடும் வாத்து. அதை மூல விக்கிரகமாக்கும் முயற்சியில் முக்கிக்கொண்டு திரியும் புலம்பெயர் நாடுகளிலுள்ள கே.பி. முகவர்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமது அனைத்துப் பித்தலாட்டங்களையும் கைவிட்டு, மாவீரர்கள் மீது உறுதியிட்டு, மனம் திருந்தித் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கப் போராடும் தமிழ்த் தேசிய சக்திகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழீழ மக்கள் சார்பாக வேண்டுகின்றோம்.


கருத்துகள் இல்லை: