புதன், 14 ஆகஸ்ட், 2013

முரண்பாட்டுக் கொள்கை -

Blog post image #1
நாடாளுமன்றம்மீது 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2006ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், அப்சல் குருவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தப்பட்டது.
தற்போது அது மறுக்கப்பட்டு பயங்கரவாதி அப்சல் குருவுக்கும் ராஜிவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டு கைதாகி சிறையில் 18 ஆண்டு களுக்குமேல் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் கருணை மனு மறுக்கப்பட்டு நால்வருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப் போவதாக அதிகார வட்டத்திலிருந்து செய்திகள் வருகின்றன.
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலை யைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச் சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது.
அதிலும் மாணவப் பரவத்தில் சிறைசென்ற பேரறிவாளன் பதினெட்டு ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம். அதனினும் கொடியதாக எந்தவித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம். சாவின் நிழலில்தான் வாழ் வையே நகர்த்த வேண்டும் என்ற துன்பத்தின் எல்லையில் பேரறி வாளனின் நிலை இருந்துவருகிறது.
தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடு வதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட்பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
தூக்குத் தண்டனைக் கைதிகளில் சாந்தன், முருகன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள். பேரறிவாளன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் ராஜிவ் படுகொலைக்குக் காரணமான `பெல்ட் பாம்' தயாரித்தவர் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டவர். உச்சநீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலை யில், அரசின் கருணைப் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தனது தீர்மானங்கள் மூலம் “மரண தண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்படவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
ஒன்று “மரணதண்டனை மனிதகுலத்தின் கண்ணியத்தை குலைப்ப தாகும்.”
மற்றொன்று “மனிதாபிமானமின்றி கொடூரமான தண்டனைக்கு எவரை யும் உட்படுத்தக்கூடாது என்ற மனித உரிமை மரண தண்டனை விதிப்பதால் மீறப்படுகிறது” என்பதாகும்.
மேலும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை யின் பிரிவு 6-ல் “மரண தண்டனை பொதுவாக விதிக்கக்கூடாது, அப்படி விதித்தாலும் உரிய நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளிக்குத் தகுந்த வாய்ப்பு அளித்த பிறகுதான் உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும்,
“18 வயதிற்கு உட்பட்டவர்க்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது” என்றும்,
“கர்ப்பமுற்ற பெண்களைத் தூக்கிலிடக்கூடாது” என்று பல முக்கிய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டபோது ஏழு நாடுகள் தான் மரணதண்டனை இல்லாத நாடுகள். ஆனால் தற்போது மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் வலுப்பெற்று பல நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுவிட்டன.
ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில் 142 நாடு களில் மரணதண்டனை நீக்கப்பட்டுவிட்டது. இந்த வருடம் ஜூன் மாதம் டோகோ என்ற நாடு மரணதண்டனை நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
‘ரெஜிஸைட்’ என்ற இந்த “அரசுக் கொலை தொடரவேண்டுமா, நீக்கப்படவேண்டுமா?” என்ற கேள்விக்குப் பல மனித உரிமை அமைப்புகள் “இந்தக் கொடூரமான அரசே செய்யும் மனித உரிமை மீறல் ஒழிக்கப்பட வேண்டும்” என்று போராடி வருகின்றன.
மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் “அரசே கொலையாளியாகக் கூடாது. இத்தகைய உச்சகட்ட தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்கு மாறாக சமுதாயத்தில் எதிர்மறை உணர்வுகள், பழிக்குப்பழி வாங்கவேண்டும் போன்ற வன்முறைகள் தூண்டக்கூடிய மனநிலை உருவாக வழிவகுக் கின்றன” என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.
இந்திய சட்ட விதிமுறைகளின்படி, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கருணை மனுவை அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி கருத்து கேட்பார். உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநில கவர்னருக்கு அனுப்பி கருத்து கேட்கும். பின்னர், ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் தனது பரிந்துரையைத் தெரிவிக்கும். அதன்படி, ஜனாதிபதி அனுப்பிவைத்த அப்சல் குருவின் கருணை மனுவைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம் அதை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதோடு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கலாம் என்று டெல்லி கவர்னர் அளித்த பரிந்துரையை ஆமோதித்துள்ள உள்துறை அமைச்சகம், தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதிக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கை களூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் கொடும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறை களில் இதுவும் ஒன்றாகும்.
மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக் கோட்பாடு களுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல உலக நாடுகளிலும் மக்கள் மனங்களிலும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. இன்னும் மீதமுள்ள பல நாடுகளிலும் மரண தண்டனை வேண்டாம் என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகளில் அஹிம்சையைப் போதித்த காந்திஜி, புத்த பெருமான், மகாவீரர், வள்ளலார் பிறந்த நாட்டில்… உலக நாடுகளில் பெரும் ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் இன்னும் மரண தண்டனையை விதிப்பது கொள்கைக்கு மாறானதாகவும் மனித தர்மத்துக்கு எதிரானதாகவும் இருக் கிறது.
‘மரணதண்டனை வேண்டாம்’ என்பவர்கள் தங்கள் உரத்த பதிவை கவினுக்குத் தெரிவியுங்கள். அதோடு ஜனாதிபதி மாளிகைக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ‘மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து’ தந்தி அனுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்து மனித உரிமையைக் காப்போம். எந்த ஒரு குற்றத்துக்கும் மரண தண்டனை மட்டுமே முழு தீர்வாகாது என்பது மாந்த உரிமை காப்பவர்களின் கருத்தாக உள்ளது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: