தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
''மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது. உதாரணமாக, அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை உள்ள முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முஸ்லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல. ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக்கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.
மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஜப்பானியர்கள் ஜப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.
தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!''
-- அய்யா பழ.நெடுமாறன் விகடன் மேடையில் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக