வெள்ளி, 24 அக்டோபர், 2014

சுதாகரன் திருமணம்! நடக்கும் கூத்துகளை அந்த பகுதி மக்கள் வயிற்றெரிச்சலுடன் ( பகுதி- 2)

செப்டம்பர் 13, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து.. சாலையெல்லாம் ஒளிவெள்ளம் பொழிய அந்த வெளிச்சத்தில் உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன் தோழி சசிகலா மற்றும் பரிவாரங்களுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தார் முதல்வர்! ‘‘இந்த ஒரு திருமணத்துக்கு இத்தனை கோடிச் செலவா..?! திருமணமாகாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரு லட்சம் என்று கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தாலும் நிச்சயம் ஒரு லட்சம் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாமே! ஓர் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மத்தியதரக் குடும்பத்து வாக்காளர் அடித்த வயிற்றெரிச்சல் கமெண்ட் இது!


தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஏழு... கல்யாண நாள்!

சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆறாம் தேதி இரவுத் தூக்கம் போட்டு எழுந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கும் அவசரம்... ஒட்டுமொத்தமாக அத்தனைபேரும் காலைக்கடன் கழிக்கிற அளவுக்கு அங்கே வசதியில்லை. ஓடினார்கள், அருகிலேயே இருந்த கடற்கரைக்கு. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் கிழக்கு வெளுத்தபோது, கடற்கரை திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறியிருந்தது.

அடுத்தது - குளியல்.

‘‘பக்கத்துல நீச்சல்குளம் இருக்கு டோய்...’’ என்று ஒரு தொண்டர் குரல் விட... ‘திமுதிமு’வென மெரீனா பீச்சை ஒட்டியிருந்த நீச்சல்குளத்தை நோக்கி ஓடினார்கள். ஒரே ஜம்ப்தான்! ‘மாங்கு மாங்கென்று’ சோப்பு வேறு போட்டுத் தேய்த்துக் குளித்துவிட... நீச்சல்குளம் முழுக்கக் ‘குப்’பென நிறைந்துவிட்டது சோப்பு நுரை! இந்த நீச்சல்குளம் ஆரம்பித்த நாள் முதல் சோப்பு போட்டுக் குளித்த முதல் சம்பவம் இதுதானாம்!

சரி... ஆறாம் தேதி மாலை நடந்த மாப்பிள்ளை அழைப்பில் இருந்தே தொடங்குவோம்!

அந்தி சாயும் நேரம்... அடையாறு சிக்னல் அருகில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை ஊர்வலம்!

மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.30-க்கு வந்தார் சுதாகரன்! அந்தக் கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகரன் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர்.

சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வளர்ப்புமகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்!
6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தனமரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பில் இருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! ஆனால், அந்தச் சந்தன அழகை ரசிக்க முடியாதபடி சிவப்புநிற ‘வெல்வெட்’ துணியால் மறைக்கப்பட்டிருந்தது சாரட்!

சட்டம் - ஒழுங்கு காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத்துக்கூட இதற்கென ஸ்பெஷல் பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப்படை அணிவகுத்தது!

அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்!

இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ‘அம்மா’ நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜுவல்லரியாக’ உடல் முழுதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக நடந்துவர... அவரது உறவுக்காரப் பெண்கள் அதைவிட சற்றே குறைந்த நகைகளுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக நடைபோட்டனர்.

இருபத்தைந்து நிமிடம் நடந்து சாதனைபடைத்த நிலையில், ஜெயலலிதா முகத்தில் களைப்பு பெருகியது. தடித்த வைர வளையல் மாட்டிய தனது வலது கையால் முகத்தை லேசாகத் துடைத்தபடி அவர் திரும்பிப் பார்க்க... கூடவே ஊர்ந்து வந்த அவரது கார் கதவு திறந்தது. ஏறிக்கொண்டார்!

அடையாறு பாலத்தைக் கடந்து அமைச்சர்கள் இல்லத்துக்கு அருகே போடப்பட்டிருந்த ‘கோட்டை செட்டிங்கை’ ஊர்வலம் நெருங்கியபோது, முதல்வரின் கார் நின்றது. மீண்டும் ‘வாக்’ செய்ய ஆரம்பித்து விட்டார்!

இசைக்கல்லூரி அருகே மதில்மேல் உட்கார்ந்திருந்த அழுக்கு உடை அணிந்த இளைஞர் ஒருவர், அம்மாவைக் கிட்டத்தில் பார்த்தவுடன் அவரை நோக்கி அப்படியே ஓடிவர... சுதாரித்த போலீஸ் பாய்ந்து ஒரே அமுக்காய் கொண்டுபோனது! மீண்டும் காரில் முதல்வர்!

நல்லவேளையாக, மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் போய்ச் சேர்ந்த பிறகு சொல்லி வைத்ததுபோல இருபது நிமிடத்துக்கு ‘சோ’வெனப் பெய்தது மழை! திடுக்கிட்ட தொண்டர்கள் ஓடி ஒளிய இடம் பார்ப்பதற்குள், அவர்களை முற்றிலுமாக நனைத்து முடித்தது மழை!

உள்ளே மணவீட்டார் நலுங்கு சம்பிரதாயங்களை நடத்திவிட்டு சாப்பிடத் துவங்கியபோது, வெளியே கட்சிக்காரர்கள் பலர் குளிரில் வெடவெடத்துக்கொண்டிருந்தனர்!

மறுநாள்... திருமணம்!

போயஸ் தோட்டத்திலிருந்து மெரீனா வரை கட்டப்பட்ட வாழை மரங்கள் அனைத்தும் அவசர கதியில் கட்டப்பட்டதால், முன்னிரவு பேய்த மழைக்கு அனைத்துமே உடைந்து தெருவில் சரிந்துகிடந்தன. குலை இல்லாமல் வாடி வதங்கி அமங்கலமாகக் காட்சியளித்த வாழை மரங்களை மாநகராட்சி வண்டியின் குப்பை லாரிகளில் அவசர அவசரமாக அள்ளி ஏறக்கட்டிக் கொண்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள். காலை திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் முதல்வர், சரிந்து கிடக்கும் மரங்களைப் பார்த்து அப்செட் ஆகிவிடக் கூடாதாம்!
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க... எம்.ஆர்.சி. நகரில் இருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது. பந்தலின் கடைசி வரிசையிலிருந்து பார்த்தால் ‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை தக்கனூண்டு தெரிந்தது. மேடையில் இருந்தவர்கள் சிறு புள்ளிகளாகத் தெரிந்தனர். பந்தல் அத்தனை நீளம். முக்கால்வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டிவியில்தான் கல்யாணத்தை பார்த்தார்கள்.

மேடைக்கு அருகில் இடம் கிடைத்தவர்கள் ஜெயலலிதா, மணமகன் சுதாகரன் மற்றும் சசிகலா குடும்பத்துப் பெண்கள் அனைவரும் தங்க நிற உடையை யூனிஃபார்ம் போல அணிந்திருந்தது கண்டு ரசித்தார்கள்.

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் வராததால் முதல்வர் அப்செட் ஆனதாகத் தெரிகிறது. ‘‘இவ்வளவு தூரம் நேரில் சென்று அழைத்தும் காங்கிரஸ்காரர்கள் புத்தியைக் காட்டிவிட்டார்களே... நல்லவேளை, தேசிய முன்னணித் தலைவர்களாவது வந்திருந்து எனக்கு அகில இந்திய ஸ்டேட்டஸைக் கொடுத்தார்களே’’ என்று ஒரு அமைச்சரிடம் அந்தத் திருமண கலாட்டாவுக்கு நடுவிலேயே சொன்னாராம் முதல்வர்.

வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவதுபோல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம். இடுப்பில் இருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி-யான ஸ்ரீபால்.

சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கு திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.
யாதவரான பீகார் முதல்வருடன் மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் கண்ணப்பன். ஒவ்வொரு வி.ஐ.பி.க்கள் தன்னைக் கடந்து சென்றபோதும் எழுந்து எழுந்து நின்றார் முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங்.

செம்மங்குடி சீனிவாச ஐயர் வந்தபோது யாரும் அவரை வரவேற்கவில்லை. ‘சிவனே’ என்று ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். கமல்ஹாசன் மனைவியுடன் வந்து, சிவாஜி கணேசனையும் மணமக்களையும் பார்த்துப் பேசிவிட்டு, ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமலேயே போய்விட்டார்.

திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவை உச்சரிக்கும்போதும், தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ. ஜெயலலிதாவின் மகன் சுதாகரன் என்று கூறினார்கள். ஆனால் செவாலியர், நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.

திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான்.

முகூர்த்தம் பத்தரையில் இருந்து பன்னிரண்டு மணிக்குள், தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!
‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான். ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள். இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி ஒழுங்காக நடக்கிறதா என்று பார்க்க வேண்டிய முக்கிய இன்சார்ஜ்!

என்னதான் ஏற்பாடு செய்தும் திருமணத்துக்கு வந்தவர்களில் பாதிக்கும் மேலான தொண்டர்கள் சாப்பாடு கிடைக்காமல் சாபம் விட்டுக் கொண்டு சென்றது சர்வசாதாரண காட்சியாக இருந்தது!

மொத்தம் எட்டுப் பந்தல்களில் சாப்பாடு போடப்பட்டது! மிக நீண்ட அந்த ஒவ்வொரு பந்தலிலும் ஒரு பாதி வரைதான் இலை போட்டுச் சாப்பாடு வைத்தனர். மறுபாதியில் தொண்டர்கள் வந்து அமருவதும், வெகுநேரம் வரை யாரும் கவனிக்காமல், பசி மயக்கத்துடன் எழுந்து செல்வதுமாக இருந்தனர்!

குடிக்க ஒரு இலைக்கு ஒரு பாட்டில் ‘மினரல் வாட்டர்’ வைக்க வேண்டும் என்று ஏற்பாடு’ அந்தத் தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் சிலர் பெட்டி பெட்டியாக கார்களில் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

வாசலில், தாம்பூலப் பைகள் அளிக்கப்படுவது கண்ணில்பட்டதும் அதில் இருந்து பழமாவது எடுத்துச் சாப்பிடலாம் என ஆவலுடன் ஓடினர்.

பல பைகளில் பழம் இல்லை. தேங்காய் மட்டும் இருந்தது. அந்தத் தேங்காயை அங்கேயே உட்கார்ந்து, காலுக்கிடையில் அழுந்தப் பிடித்துக் கொண்டு, நார் உரித்துக் காயை உடைத்து அவசர அவசரமாக பசியாறினர் பலர்!
திருமணம் முடிந்ததும்தான் தாமதம்... எம்.ஆர்.சி. நகரையொட்டியுள்ள பகுதிகளில் படுபயங்கர அமர்க்களம்! கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் கூத்துகளை வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பகுதியில் வாழும் ஏழை மக்கள் பலர், அலங்கார ஆடம்பரப் பொருட்களில் கைக்குக் கிடைத்ததைப் பிய்த்து எடுக்கத் துவங்கினர்.

சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த ‘பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்’ அலங்காரச் சின்னங்கள் அடித்துத் தூள் தூளாக்கப்பட்டன. முதல்வரின் கட்-அவுட்கள் மீது ஏழு வயதுச் சிறுவன் முதல் எழுபது வயது கிழவர் வரை தாங்களாகவே ஏறி, அவிழ்த்து, தரையில் போட்டு உடைத்து, ப்ளைவுட் கட்டைகளை விலைக்குப் போடத் தோளில் தூக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஒரு மூதாட்டி அலங்கார கட்-அவுட் ஒன்றைத் தன் பேரனின் துணையோடு நகர்த்த முடியாமல் நகர்த்திக்கொண்டு போனார். ‘‘பாவம்... நாலைந்து நாளுக்கு அடுப்பெரிக்கப் பயன்படும்!’’ என்று சொல்லி, பார்த்துக்கொண்டிருந்தது போலீஸ்.

தொங்கிக்கொண்டிருந்த அலங்கார சீரியல் விளக்குகளை ஆங்காங்கே பலர் தங்களுக்கு எட்டியது வரை பிடித்து இழுத்துச் சுருட்டிப் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர். இதைப் பார்த்துவிட்டு அதன் உரிமையாளர்கள் பகலிலேயே மின்சாரத்தை அதில் பாயவிட்டனர். இதனால், பலருக்கு ஷாக் அடிக்க... அப்படியும் கட்டைகளைக் காலடியில் போட்டுக்கொண்டு பலரும் அலங்கார விளக்குகளைச் சுருட்டிக்கொண்டுதான் சென்றனர்.

தாலி கட்டிய மூன்றாவது நிமிடமே மிச்சம் மீதி இருந்த வாழை மரங்கள் கந்தல் கந்தலாகிவிட்டன! நரசிம்மவதாரம் எடுத்த பொதுமக்கள், வாழை மரங்களைப் பிய்த்துக் குதறி உள்ளே இருந்த வாழைத்தண்டை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

ஏதுமில்லாத ஏழைகள்தான் இப்படியென்றால், திருமண பந்தலிலும் இதே கதிதான்! அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் எல்லோருமே பைகளில் ‘ஏதேதோ’ அள்ளிக்கொண்டு போனார்கள். பல லட்சம் செலவில் திருமண வளாகத்தில் ஒட்டியிருந்த கலர் பேப்பர்கள், பளபளா பேப்பர்களைக்கூடச் சுருட்டிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு விரைந்தனர்.

திருமணத்தில் டெல்லி அதிகாரிகள்!


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிலதிபர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு அவருக்கு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில் இவ்வளவு செலவு செய்ய ஏது உங்களுக்குப் பணம்...வருமானம் எவ்வளவு?’’ என்று குடைந்து எடுத்துவிட்டார்கள்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு, டெல்லியில் இருக்கும் நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி டெல்லியில் இருந்து வருமான வரித்துறை உயரதிகாரிகள் ஏழுபேரும் சென்னையில் இருக்கும் வருமானவரி புலனாய்வுத்துறை உயரதிகாரிகள் நால்வரும் சென்றனர்.

ஒரு தொழிலதிபரின் வீட்டுக் கல்யாணத்தில் லட்ச ரூபாய் செலவு செய்ததற்கு இவ்வளவு கெடுபிடி செய்த வருமானவரித்துறையினர், கோடிக்கணக்கில் செலவு செய்த முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

கருத்துகள் இல்லை: