வியாழன், 20 மார்ச், 2014

தன்னிகரில்லாத தமிழ்

தன்னிகரில்லாத தமிழ்     
       

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்குக் கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது என்றாலும், தமிழ் மிகப் பழமையான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட இப்பாடலைப் பலர் தங்களின் சார்புகளுக்கு ஏற்பத் திரித்தும், புகழ்ந்தும், இகழ்ந்தும், விமர்சித்தும் பேசி வந்திருக்கிறார்கள்.

மொழி மீது தமிழகத்தில் ஒரு காலத்தில் அதீதப்பற்று இருந்த நிலைமாறி இன்று "தமிழன்" என்று கூறுவதே இரண்டாம் பட்சமாக மாறிவிட்ட சூழ்நிலையில், தமிழனின் வரலாறு குறித்த ஆய்வுகளுக்குத் தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழக வரலாற்றுத் தேடல் என்பது தமிழனின் மிகத் தொன்மையான வரலாற்றுத் தடயங்களைத் தேடிச் செல்லும் மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் தங்கள் வரலாற்றைத் துச்சமென மதிக்கும் தமிழர்கள், தமிழக அரசுகள் எனப்பல இடற்பாடுகளைக் கடந்துதான் வரலாற்று ஆய்வாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கூக்குரலிட்டு அரியணை ஏறிய அரசாங்கங்கள் கூடத் தமிழ் குறித்த ஆய்வுகளுக்குப் போதிய ஒத்துழைப்புக் கொடுத்ததில்லை. பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்புகளைக் கூட வரலாற்று ஆய்வுகளுக்காக இழந்துள்ளனர். தமிழக ஆய்வாளர்களைக் கடந்து வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளைக் கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளனர்.

தமிழனின் வரலாற்றுத் தடங்கள் பல இடங்களில் அழிந்து போய்விட்டன. இன்னும் சில தடங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதனைப் பாதுகாக்க மிகப்பெரிய ஒரு கூட்டுமுயற்சி தேவைப்படும் சூழ்நிலையில் சில புதிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. புதிய "அரிய" வரலாற்றுக் கண்டுபிடிப்புக்கள் நிகழும் பொழுதெல்லாம் அதனைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு காலத் தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்றுத்தான் இன்று இணையம் வரை கிளை பரப்பி இருக்கிறது. செம்மொழி நிலையையும் "தாமதமாகப்" பெற்று இருக்கிறது.

தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் தமிழிதான். அதிலிருந்து ஒரே சமயத்தில் மூன்று எழுத்துருக்கள் வெவ்வேறு இடங்களில் நிலைபெறத் தொடங்கின. தென்தமிழ்நாட்டில் வட்டெழுத்துக்களும், வடதமிழ்நாட்டில் தமிழ் எழுத்துக்களும் தோன்றின. அசோகர் பிராகிருத மொழியை எழுதுவதற்காக இத்தமிழியைக் கடன்வாங்கிப் பயன்படுத்தியதால், வட இந்தியாவில் இது அசோகன் பிராமி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஹிந்தி, பஞ்சாபி முதலான வடமொழிகள் நாகரி எழுத்துமுறையிலிருந்து தோன்றினாலும், நாகரி எப்பொழுது தோன்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்கும் காலத்தால் மிகவும் முற்பட்ட நாகரிக் கல்வெட்டு இராஜசிம்மருடையதாகும். மாமல்லபுரம் புலிக்குகை எனப்படும் அதிரணசண்டேசுவரத்தின் வாயிலில் ஒரு புறம் கிரந்தக் கல்வெட்டும், மறுபுறம் அதே கல்வெட்டு நாகரியிலும் வெட்டப்பட்டுள்ளன. இதைக்கொண்டு, குறைந்த பட்சம் அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழகத்தில் நாகரி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், வட இந்தியாவில், அசோகருக்கும் இராஜசிம்மருக்கும் இடைப்பட்ட காலத்தில் நாகரி தோன்றியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கிரந்தம் என்பது சமஸ்கிருத வார்த்தைகளைத் தமிழில் எழுதத் தமிழர்கள் கண்டுபிடித்த எழுத்துமுறையாகும். 4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர்களின் இறுதிக்காலம் வரை கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. வட்டெழுத்துக்கள் பனையோலைகளில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்டவை என்ற கருத்து இங்கு பொருந்தாது. ஏனெனில், பழந்தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள் முதலான நூல்கள் தமிழி எழுத்துருவில்தான் ஓலை கிழியாமல் எழுதப்பட்டன. தென் தமிழ்நாட்டில் பாண்டியர்களால் பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்துக்கள் சோழர்கள் பாண்டியநாட்டைக் கைப்பற்றும்வரை தொடர்ந்தன. முதலாம் இராஜராஜர் காலத்திலிருந்து சோழசாம்ராஜ்யம் முழுவதும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டன. இருப்பினும் இவ்வட்டெழுத்துக்கள் 100% வழக்கொழியாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளின் எழுத்துக்களாக மாற்றம் பெற்றன.

இதுதான் பொதுவான மொழி எழுத்துருக்களின் வரலாறு. மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தொன்மை குறித்த பெருமை ஒருபுறம் இருக்க அசோகரின் பல கல்வெட்டுகளைக் கண்டுபிடித்ததன் வாயிலாக அசோகரின் பிராமி எழுத்துக்கள்தான் பல மொழிகளின் அடிப்படை என்ற கருத்தாக்கம் நிலவி வந்தது. இதற்குக் காரணம் அசோகரின் காலத்திற்கு முந்தைய எந்தக் கல்வெட்டும், எழுத்துருக்களும் கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் தமிழ்மொழி அசோகரின் எழுத்துருவில் இருந்தது வந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவி வந்தது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு அருகே கொடுமணல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வுகளில் பழந்தமிழ் எழுத்துருக்களும் சமீபத்தில் தேனி அருகே கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுகற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அசோகர் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே தமிழ் எழுத்துருக்கள் உருவாகி விட்டன என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன். இதைத் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களும், 'சங்ககாலத்தில் அறிவொளி இயக்கம்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் ஏதோ தமிழ் ஆர்வலர்கள் அதீத ஆர்வம் கொண்டு கூறும் கதைகள் அல்ல. விஞ்ஞான ரீதியில் இதன் தொன்மையான காலம், அந்த எழுத்துருக்களின் வடிவம் இவற்றைக் கொண்டு இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில்தான் சமீபத்தில் ஒரு வரலாற்று ஆதாரம் மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்துவில் செய்தியும், அந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையும் வந்திருந்தன. சிந்து சமவெளி நாகரித்தின் மொழி என்ன என்பது குறித்துப் பலவிதமான ஆருடங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சிலர் இது குறித்துத் தவறான எண்ணத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு வெளியிட்ட தகவல்கள் சரியான fraud என்றும் நிரூபிக்கப்பட்டன.

சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்துப் பலர் பல தியரிகளை முன்வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச்சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத்தான் இருக்கும் என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் மொழிகளில் கூடத் திராவிட மொழிகளின் தாக்கம் இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு கட்டுரை இணையத்திலும் வெளியாகியுள்ளது. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிகள் Indus script என்ற எழுத்துருவில்தான் இருந்தன. இவை pictograms போல உள்ளவை. சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்த மொழி ஆரிய மொழியா, திராவிட மொழியா என்ற சச்சரவு இருந்த நிலையில்தான் மயிலாடுதுறைக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட ஆயுதம் இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு ஆகும்.

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட இந்த ஆயுதத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட Indus எழுத்துரு வடிவில் சில உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதுதான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். இது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவைச் சார்ந்த ஆயுதம் என்பதால் இது வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்துக்கும் இடமில்லை.

இந்த எழுத்துருவை decode செய்த இத்துறையில் உலகளவில் மதிக்கப்பெறும் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தக் கல்லில் காணப்படும் Indus script "முருகன்" என்னும் பொருளைக் கொடுப்பதாக கூறுகிறார். இதன் மூலம் சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்தின் ஆதிகால மனிதனுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன என நிரூபிக்கப்படுவதுடன், சிந்து சமவெளி நாகரிகத்தின் மொழி குறித்து இருக்கும் சச்சரவுகளுக்கும் ஒரு தெளிவான விடை கிடைக்கிறது. சிந்து சமவெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது. திராவிடமொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.

தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.

கருத்துகள் இல்லை: