வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.
நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா?கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.
சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.
நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும்.
அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.
இது பழைய போராட்டமே
இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும்.
எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம். இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.
இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத - மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.
இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்.,
நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும்,
நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.
இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும்.
உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த (சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.
கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.
இதுதான் தேவாசுர (சுரர் - அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவ தாகும்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் - அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.
ராட்சதர்கள் யார்?
புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.
புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப் பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன.
அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர் களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்கு கிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக் கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்! அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.
இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.
இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி - கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக் களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின் றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.
எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.
தீபாவளி
இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில்,
நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் - இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் - சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி - நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).
இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவி யாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை!
அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.
இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.
ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை" 7.11.1963
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக