திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பெரும்பாலான தமிழர்கள் சிங்களத் தமிழர்களாக மாறிவிடுவர்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது.உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் நாம் புரிதல் இன்றிச் செயற்படுவோமானால் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சிகளே எமக்கு எஞ்சும்.நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்ற தமிழினம் 1948 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக ரீதியாகப் போராடி பின்னர் 1970 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டது தொடக்கம் அதற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக இருந்து வளர்ச்சியடைந்து ஒரு மரபுவழித் தேசிய இராணுவமாக கட்டமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது வரை அவர்கள் தமது சொந்த முயற்சியாலேயே முன்னேறினார்கள். கெரில்லா அமைப்பாக இருந்த போது தனியே தமது திறமைகளைப் பயன்படுத்தி தாங்களாகவே ஆயுதங்களைத் தயாரித்து எதிரிகளை அழித்தார்கள். கட்டமைக்கப்பட்ட படைப்பிரிவாக புலிகள் வளர்ச்சியடைந்த பின்னரேயே அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகள் கிடைக்கத் தொடங்கின.அதுவரை அவர்கள் பட்ட கஷ்டங்களை உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் எதிர்நோக்கியிராது. இத்தனை துன்பங்களையும் வலிகளையும் சுமந்த போதிலும் தனது மன வலிமையால் புலிகள் அமைப்பை தேசியத் தலைவர் வளர்த்தெடுத்தார். முப்பது வருடமாக தலைவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை மூன்று வருடங்களாக மிகவும் கடும் முயற்சி செய்து, நாட்டின் சகல வளங்களையும் பயன்படுத்தி, சுமார் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்ற பின்னர் சிங்களப் படைகள் அழித்திருக்கின்றன. போராட்டம் அழிந்த பின்னரும் எமக்கு உரிய தீர்வை யாரும் முன்வைக்கவில்லையே. இது ஏன்?உலக நாடுகளிலுள்ள பலம்பொருந்திய தலைவர்கள் பலர் தமிழ் மக்களின் போராட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் வீரத்தை மெச்சியுள்ளனர். அவர்களின் தியாக உணர்வை மதித்திருக்கின்றனர். இன்றுவரை அவர்கள் புலிகளையும் தமிழ் மக்களையும் மனதார நேசிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் காக்கின்றமை தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிதமரான லீ குவான் யூ, தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் நேர்மைத்தன்மையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். அந்தக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அந்த மாபெரும் அரசியல் தலைவரின் கருத்துக்களால் ஈழத் தமிழ் மக்கள் தமது வலிகளையும் மறந்து ஆனந்தமடைந்திருக்கின்றனர்.ஆனால், அவர் இந்தக் கருத்துக்களை பதவியில் இருக்கும் போது ஏன் கூறியிருக்க முடியாது. அப்போது கூறியிருந்தால் அது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருந்திருக்குமே என்று ஈழத் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.தமிழ் மக்களை மகிழ்வித்த அந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமரின் கருத்து, ‘சிங்களவர்களால் தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க சிங்களவர்கள் அதீத முனைப்புக் காட்டுகின்றனர்’ என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. எனவே, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் லீ குவான் யூ தெரிவித்திருக்கிறார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். சிங்கப்பூரின் சிற்பி என்று வர்ணிக்கப்படுகின்ற லீ, தற்போதைய சிங்கப்பூர் பிரதமரின் தந்தையாவார். சிங்கப்பூர் மக்களிடையே சிறந்த செல்வாக்குடன் மிளிர்ந்த இவர் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பிலும் சிறீலங்காவின் சர்வாதிகாரம் தொடர்பிலும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.ஈழத் தமிழர்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிறீலங்காவில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவேண்டும்-நம்பவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அடங்காத் தமிழர்களான ஈழத்தமிழர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடவும் மாட்டார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத் தமிழர்களைச் சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள். சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப் பேராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கின்றார்.நிச்சயமாக சாதாரணமான ஒருவரால் இந்தக் கருத்துக்களைக் கூற முடியாது. லீ குவான் யூ உலகிற்கு வழிகாட்டியான ஒரு நாட்டின் முதலாவது பிரதமராக இருந்தவர். அவரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் எங்களைப்பற்றி தெரிந்து வைத்திருப்பவர்களிடம் நாம் நெருங்கிய உறவைப் பேண வேண்டும். உலகிலுள்ள ஏனைய நாடுகளின் தலைவர்களும் ஈழத் தமிழர் தொடர்பில் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்காவிட்டாலும் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிடம் தேடிச்சென்று நாம் எமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதற்படியாக நாம் லீ குவான் யூ அவர்களைச் சந்தித்து எமது சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான அடுத்த கட்ட வழிமுறைகள் தொடர்பில் உரையாடல்களை மேற்கொள்வது நன்மை பயக்கும்.மேலும், லீ யைப்போன்று எமது போராட்டத்தை தெளிவாக புரிந்துகொண்ட அரசியல் தலைவர்களை நாங்கள் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம் சர்வதேச ரீதியாக எமது விடுதலைக்கான புதிய களம் ஒன்றை நாங்கள் திறக்க முடியும். இதன் மூலம் எமது போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்வதும் இலகுவானதாக்கப்படும். இந்தக் களத்தில் யார் இறங்குவது, யாரை இறக்குவது என்று எமக்குள் போட்டிகள் இல்லாமல் ஈழத் தமிழ் மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறையுடன் சர்வதேச ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களை உள்ளடக்கி இந்தக் குழுவை அமைக்க முடியும். காலம் எமக்காக காத்திருக்காது. தற்போது நாம் இதனைச் செய்யாமல் இருந்தால் இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் இதே வேகம் எங்களிடம் இருக்கப்போவதில்லை. தற்போது தமிழீழத்திற்காகச் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களைத் தேடித் தேடி அழிப்பதில் சிங்களம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு மேலாகத் தமிழர் தாயகத்தில் உள்ள இளைஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் பல்வேறு சுகபோகங்களைக் காட்டி அவர்களை போராட்ட சிந்தனைகளிலிருந்து திசை திருப்ப மகிந்த அரசு அதீத முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து நாம் செயற்பட முன்வர வேண்டும். தற்போது தமிழ்க் கட்சிகள் நினைப்பது போன்று இனியும் இலங்கைக்குள் பேசி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது வெறும் பகற்கனவு. எனவே, பொறுப்புடைய தமிழ்த் தேசியவாதிகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பு ஒன்றை உருவாக்கி எமது விடுதலை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துங்கள். இல்லையேல் இன்னும் சில பத்தாண்டுகளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தேவைப்படாது. ஏனெனில், பெரும்பாலான தமிழர்கள் சிங்களத் தமிழர்களாக மாறிவிடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக