திங்கள், 5 ஆகஸ்ட், 2013

” தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு “

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.
120 m.m. கனரகப் பீரங்கியை தண்ணீருக்குள்ளால் இழுத்துச் செல்லும் பெண்புலிகள்.(மாமுனைத் தரையிறக்கச் சமர்)
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.
தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி கேணல் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
120 m.m. எறிகணைச் செலுத்தியை இயக்கும் பெண்புலிகள்
இன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியாபித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய – தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில், ‘எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக