“அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.”
எனத் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அறிவில் உயர்ந்தும் எளிமையாக வாழும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பார்த்தபோது தேசியத் தலைவரின் இந்த வாக்கியம் தான் நினைவில் தோன்றியது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அறிமுகமில்லாது போனாலும், தாயக மக்களில் பலர் குறிப்பாக விடுதலைப் புலிகளின் தளபதிகளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் வரை பேராசிரியர் அறிவரசன் அவர்களை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இனத்தை அழிப்பதற்கான கடும் தாக்குதல்கள் வன்னியில் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில், கடும் குண்டு வீச்சுக்களுக்கும், ஆழ ஊடுருவும் சிங்களப் படையணிகளின் தாக்குதல்களுக்கும் மத்தியில் வன்னியில் நின்று தமிழைக் கற்பித்துக்கொண்டிருந்தார்.
தமிழர்களின் பலத்தை அழித்துவிடுவதற்காகப் புலனாய்வுக் கண்கள் பல வன்னியில் ஆழ ஊடுருவ முனைந்து கொண்டிருந்த காலமது. எவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டிய இக்கட்டான நிலையில், வன்னி மண்ணில் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றப் பேராசிரியர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்றால், எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்திருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவர் பிரான்ஸ் வந்திருக்கின்றார் என அறிந்தபோது அவரைச் சென்று சந்திக்கும் ஆவலே மிகுதியாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் தமிழ்ப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் எங்கும் இருந்து வந்திருக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை அவர் நடத்திக்கொண்டிருந்தார்.
அங்கு சென்று அவரைச் சந்தித்த நாம், அவரை ஊடக இல்லத்திற்கு அழைத்துவந்து கௌரவப்படுத்தியிருந்தோம்.
ஈழமுரசு இதழின் ஊடாக புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளத் தொடர்ச்சியாக அவர் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாம் அவரிடம் முன்வைப்பதற்கு ஏற்கனவே கலந்தாலோசித்திருந்தோம். ஆனால், ஈழமுரசு இதழைப் பார்த்திருந்த அவர், அதில் தமிழ் மொழி தொடர்பாக தொடர்ச்சியாக எழுதுவதற்கு தனக்கொரு வாய்ப்புத் தரமுடியுமா? என்று கேட்டபோது, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்த மகிழ்ச்சியை’ அடைந்தோம். பேராசிரியர் அறிவரசன் அவர்களின் ஆக்கங்களை விரைவில் வாரா வாரம் இனி ஈழமுரசில் பார்க்க முடியும்.
அத்துடன், அவரது தமிழ் மீதான பற்றுக் குறித்தும், வன்னி மண்ணில் அவர் வாழ்ந்த பெருமைக்குரிய (இப்படித்தான் அந்த நாட்களை அவர் குறிப்பிடுகின்றார்) நாட்கள் குறித்தும், தமிழீழத் தேசியத் தலைவருடனான அவரது சந்திப்புக்கள் குறித்தும் கேள்விகளைத் தொடுத்தோம். ஈழமுரசின் வாசகர்களுக்காகச் சளைக்காது தனது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்...
(ஆ-ர்)
ஊடக இல்லம்:- தமிழ்த்துறைப் பேராசிரியர் என்ற வகையில் தமிழோடு உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?
அறிவரசன்:- நான் அண்ணாமலை நகரில் 4 ஆண்டுகள் கல்வி கற்றேன். 2 ஆண்டுகள் உயர் நிலைப் பள்ளியிலும் 2 ஆண்டுகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பயின்றேன். என்னுடைய அப்பாவுக்கு உடன் பிறந்த அண்ணனான எனது பெரியப்பா அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். நெடுமாறனைப் போன்றவர்களுக்கெல்லாம் அவர் ஆசிரியர். நான் ‘இன்ரர் மீடியற்’ வகுப்பில் அறிவியல் பாடங்களைத்தான் எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
எனது பெரியப்பாவிடம் பாடம் கேட்பதற்காக முதுநிலை மாணவர்கள் வீட்டுக்கு வந்தபோது 2 மணிநேரம் 3 மணிநேரம் தொல்காப்பியம் மற்றும் பிற இலக்கியங்களை எல்லாம் எனது பெரியப்பா மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதைக் கேட்டுக்கேட்டு இறுதியில் பட்டப்படிப்பு படிக்கும் போது தமிழைத்தான் கற்கவேண்டும். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் நான் இளம் கலை (BA) என்று சொல்லப்படுகின்ற பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கற்றேன். அதன் பின்னர் முதுகலை (MA) பட்டம் பெற்றபின்னர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தேன்.
எனது ஊரான கடையத்துக்கு பக்கத்தில் 5 கல் தொலைவில் ஆழ்வார்குறிச்சி என்ற ஊர் உள்ளது. ஒதியமலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர். அங்குள்ள பரமகல்யாணி என்ற கலைக்கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை அதாவது ஒரே கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, 1996 இல் ஓய்வு பெற்றேன். பின்னர் 1996 யூலை முதல் சென்னை நகரத்தில் பெரியார் தொடங்கிய விடுதலை நாளேட்டில் துணையாசிரியராக 3 ஆண்டுகள் இருந்தேன். பின்னர் 2006 மார்ச் திங்கள் 6ஆம் நாள் தமிழீழத்தில் கால்வைத்தேன்.
அங்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் தமிழ்ப் பயிற்சி அளித்தேன். அங்கிருந்து 2008 மார்ச் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு திரும்பினேன். பின்னர் 2010 நவம்பர் 26 தலைவர் பிறந்த நாளில் இருந்து ‘தமிழர் தாயகம்’ என்ற பெயரில் ஒரு மாத இதழை நடத்திக்கொண்டு இருக்கின்றேன். அதில் உள்ளூர் அரசியலுக்கு எல்லாம் அதில் இடம்கொடுக்கிறதில்லை. ஈழவிடுதலை தொடர்பாக சிறப்பான கவிதைகள், கட்டுரைகள் மற்றும் செய்திகளை வெளியிடக் கூடிய வகையில், அந்த தமிழர் தாயகம் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ளேன்.
அறக்கட்டளை சார்பில் அந்த இதழும் தொடர்ந்து வெளிவரும். அத்தோடு ஈழ ஆதரவுக் கருத்தரங்குகள், தமிழர் உரிமைக் கருத்தரங்குகள் என்று பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்திற்று இருக்கிறேன். தொடர்ந்து அவ்வாறு நடத்திற்று இருக்கின்ற திட்டத்தில் இருக்கின்றேன்.
ஊடக இல்லம்:- இன்று தாய்த்தமிழகத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அப்படியான நிலையில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது?
அறிவரசன்:- ஆங்கிலத்தின் ஆதிக்கம் என்று சொல்லப்படுவதை நான் ஏற்கமாட்டேன். ஆங்கில வேட்கை அதாவது ஆங்கில மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலேயன் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் கூட, ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் கூட இந்த ஆங்கில மொழியை விடமுடியாது பெரும்பாலான தமிழர்கள் பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனாலும் ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியை எம்மிடம் திணிக்கவில்லை. ஆங்கிலம் இருந்தால் மட்டுமே உலகத்தில் வாழலாம். ஆங்கிலம் படிக்காத பிள்ளைகள் உலகத்தில் எங்கேயும் வேலை பார்க்கமுடியாது. ஆங்கிலம் படித்தால்தான் சமூகத்தில் ஒரு தகுதி கிடைக்கும் போன்ற தவறான எண்ணங்களின் அடிப்படையில் பிள்ளைகளை எல்லாம் ஆங்கில பள்ளிகளுக்கு அனுப்புகின்றார்கள்.
இதைவிட ஒரு கொடுமையான விடயம் என்னவென்றால், திராவிட இயக்கம் (திமுக) என்று சொல்கின்றோம். அ.இ.தி.மு.க. என்று சொல்கின்றோம். இவர்களால் தமிழ் வளர்க்கப்பட்டது என்பது ஒரு நிலை. தொடக்க காலத்தில். ஆனாலும் 1967 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 1977 இல் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.முக. ஆட்சிக்கு வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. அ.தி.மு.க. என்ற திராவிட இயக்கங்களான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. இவர்களுடைய ஆட்சியில் தான். ஆங்கில வழிப் பள்ளிகள் கணக்கு வழக்கின்றி ஆரம்பிக்கப்பட்டன.
45 ஆயிரத்துக்கும் அதிகமான மழலையர் பள்ளிகள் ஆங்கில வழிப்பள்ளிகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிகக் கொடுமையான ஒரு செய்தி என்னவென்றால், இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புக்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிலை இருந்து கொண்டிருக்கின்றது. அதை மாற்றுவதற்கு என்ன வழி என்ன செய்வது என்பது பற்றித்தான் நாங்கள் எல்லாம் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றோம்.
பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகள் ஆங்கிலம் படிக்கவேண்டும் தம்மை மம்மி டாடி என்று அழைக்கவேண்டும். அது தமக்குப் பெருமை என்று தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். அது மிகவும் வருந்தத்தக்க நிலை தான்.
ஊடக இல்லம்:- இவ்வாறான நிலையைத் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?
அறிவரசன்:- நான் மிக மிக மிக எளிமையானவன். எனக்கென்று வலிமையான எந்த அமைப்பும் கிடையாது. இருக்கின்ற எந்த அமைப்போடும் என்னை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் இருக்கின்ற அமைப்போடு என்னை இணைத்துக்கொள்ள விரும்பும் அளவிற்கு எந்த அமைப்பின் செயற்பாடும் சிறப்பாக இல்லை என்பதுதான் எனது கருத்து.
ஆனாலும் என்னால் தனிப்பட்ட முறையில் அந்த அமைப்பைக் கட்டக்கூடிய செல்வாக்கும் இல்லை. ஒரு சிற்றிதழ் நடத்துகின்றேன். அதில் எழுதுகின்றேன். கவிதை எழுதுகின்றேன். கட்டுரை எழுதுகின்றேன். வாய்ப்புக் கிடைக்கும் போது மேடைகளில் பேசும்போது சொல்கிறேன். அவ்வளவுதான் என்னால செய்யமுடிந்தது.
வள்ளுவர் சொல்கிறார். ‘ஒல்லும் வகையால் அறவினை செய்யவேண்டும்’ அதாவது, உன்னால் எந்தளவிற்கு முடியுமோ அதைச் செய் என்கிறார். அந்தளவிற்கு நான் செய்துகொண்டிருக்கின்றேன்.
ஊடக இல்லம்:- நீங்கள் தமிழீழத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள் அந்த அனுபவங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?
அறிவரசன்:- நான் 1950களில் இருந்தே ஈழத்தில் நடைபெறுகின்ற போராட்டங்களில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தேன். ஒரு ஆர்வமும் இருந்துவந்தது. ஈழ விடுதலை, தமிழீழம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே அங்கு உரிமைகளுக்காக அறவழியில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தச் செய்திகளை அறிந்து கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் ‘தென்றல்’ என்கின்ற கண்ணதாசனின் ஏட்டில் கவிதைகள் எழுதினேன். தொடர்ந்து எழுதினேன்.
1983 யூலைக் கலவரத்தின் பின்னர், நிறைய போராளிகள் பரப்புரைக்காக தமிழகத்துக்கு வந்தனர். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன். என்னுடைய இல்லத்தில் கூட பல மாதங்கள் பத்து பதினைந்து போராளிகளை தங்கவைத்திருந்தேன். அவர்கள் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு உதவிகளை செய்திட்டிருந்தேன்.
காசியானந்தன் அவர்களை அழைத்து எங்கள் பகுதியில் ஒரு நாற்பது ஐம்பது பொதுக்கூட்டங்களை ஒழுங்குசெய்து தமிழீழத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளைச் செய்தேன். அதுபோன்று ஈழவேந்தன் அவர்களைக் கொண்டு பல நிகழ்ச்சிகளைச் செய்தேன். இதையெல்லாம் அறிந்த நிலையில் வன்னியில் இருந்து எனக்கு அழைப்பு வருகின்றது.
அதாவது 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்த அழைப்புக்கிடைத்தது. அங்குவரமுடியுமா என்று கேட்டார்கள். நான் வரமுடியும் என்றேன். அதற்குப்பின் பலமாதங்கள் ஆகியும் அழைப்புக் கிடைக்காமல் காத்திருந்தேன். இது எனக்குப் பெரிய ஏக்கமாக இருந்தது. போகக் கிடைக்காமல் விடுமோ என்று கவலைப்பட்டேன். பின்னர் 2006 தொடக்கத்தில் அழைப்புக் கிடைத்து அங்கு போயிருந்தேன். அங்கு போன உடனே நிதித்துறைப் பொறுப்பை வகித்த தமிழேந்தி அவர்கள் சொன்னார், ஐயா 40 உயர்தர வகுப்பு மாணவர்களை நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் தமிழைக் கற்பதற்காக. அந்த 40 பேரையும் நீங்கள் தமிழ் ஆசிரியர்களாகத் தகுதிப்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள்.
ஏனென்றால், அங்கிருக்கும் அரச பாடசாலைகளில் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. அதனால் அந்தத் தமிழை சரியாக அறியாத முழுமையாக அறியாத அரைகுறையாகத் தெரிந்த ஆசிரியர்கள் தான் உயர்தரம் வரையான மாணவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். இலக்கணம் தெரியாதவர்கள் இலக்கணம் கற்பிக்கின்றார்கள். இவ்வாறு ஒரு அவல நிலை இருக்கின்றது. அதைப் போக்கவேண்டும் என்று தலைவர் முடிவெடுத்தார்.
நாங்கள் எல்லாம் கலந்து பேசினோம். அதற்காக நானே பயிற்சியளித்து. அத்தப்பிள்ளைகளையே பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கலாம். நம்முடைய இயக்கத்தின் சார்பில் திட்டம் வகுத்து வைத்தே உங்களை அழைச்சிருக்கிறோம் என்றாங்கள். நான் ஒரு பாடத்திட்டம் வகுத்து அதைக்காட்டினேன். அவங்களுக்கு அது ரொம்ப நிறைவாக இருந்தது. இதை எவ்வளவு காலத்தில் உங்களால் முடிக்கமுடியும் அப்படின்னு கேட்டாங்கள். குறைந்தது 2 ஆண்டுகள் இருந்தால் இதை முடித்துக்கொடுக்கலாம் என்று சொன்னேன். சரி என்று சொல்லி அதன்படியே செய்தாங்க.
அதுதவிர, முழு உரிமை உங்களுக்குக் கொடுக்கின்றோம். நீங்கள் முற்போக்குக் கருத்துக்கள் பகுத்தறிவுக் கருத்துக்கள், அறிவோடு சார்ந்த கருத்துக்கள். என நீங்கள் எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். சொல்லலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் உங்களுக்கு கிடையாது. இதைச்சொல்லுங்கள் இதைச்சொல்லதீர்கள் என எந்தவித கட்டுப்பாடுமின்றி ஒரு உரிமையைக் கொடுத்தார்கள்.
தமிழ்நாட்டில் கிடைக்காத உரிமை அது. தமிழ் நாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவ்வாறு எதுவுமில்லாமல் 2 ஆண்டுகள் இலக்கணம் இலக்கியம் என 40 மாணவர்களுக்கு நான் மட்டுமே. ஒரு நாளுக்கு 8 மணிநேரம். காலையில் 6.30 மணி தொடங்கி 8.30 மணி வரை. அதன் பின்னர் 10 மணிவரை காலை உணவுக்கான இடைவேளை, அப்புறம் 10 மணி தொடங்கி 12 மணிவரை. அப்புறம் மதிய உணவு இடைவேளை அதற்கப்புறம் 2 இலிருந்து 4 மணிவரை பின்னர் அரை மணிநேரம் தேநீர் இடைவேளை, பின்னர் 4.30 மணி தொடங்கி மாலை 6.30 மணிவரை.
இவ்வாறு இரண்டு இரண்டாக 8 மணி நேரம் வகுப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வானொலி பணியாளர்கள் இருபது இருபத்தைந்து பேர். அவர்களுக்கும் வந்து கொஞ்சம் தமிழ் கற்பிக்கமுடியுமா? அவர்களுடைய ஐயங்களையும் போக்கமுடியுமா? என்று கேட்டாங்கள். அங்கு சென்று பல மாதங்கள் கற்பித்தேன். தலைவரின் துணைவியார் மதிவதனி அவர்கள் தமிழ் பாடம் கேட்க விரும்புவதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஆறு பெண் போராளிகளும் பக்கத்தில் இருந்த செஞ்சோலைக்கு வந்தார்கள். நான் அவங்களுக்கு எட்டு மாதங்கள் வரை தமிழ் கற்பித்தேன். செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாலை நேரங்களில் தமிழ் சொல்லிக் கொடுத்தேன். அறிவுச் சோலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு பொறுப்பாளர் அழைத்து, திருக்குறள் வகுப்பு எடுத்தேன். இவ்வாறு தொடர்ச்சியாகத் தங்கியிருந்து பணியாற்றிவிட்டுத் திரும்பினேன்.
ஊடக இல்லம்:- வன்னியில் நீங்கள் கற்பித்த காலப் பகுதியில் மாணவர்களின் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர் சூட்டியதாக அறியக்கிடைத்தது. அது பற்றிக் குறிப்பிடுங்கள்?
அறிவரசன்:- வன்னியில் நான் தங்கியிருந்த காலப் பகுதியில் வணிக நிறுவனங்கள் எல்லாம் தமிழ் பெயர்கள் தாங்கியவாறு இருந்தன. அது என் உள்ளத்தை ஈர்த்தது. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழ்ப் பெயர் கையேடு என்ற பெயரில் ஆண்கள் பெண்கள் என 10 ஆயிரம் பெயர்களைக் கொண்ட நூலை வெளியிட்டிருந்தார்கள்.
தமிழில் பிள்ளைகளுக்கு பெயர்வைத்தால் தமிழீழ வைப்பகத்தில் அந்தப் பிள்ளைகளின் பெயரில் ஆயிரம் ரூபா வைப்பிலிடப்பட்டு, 18 அகவை நிறைவடையும் போது அந்தப்பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடியது போல் ஒரு திட்டம் வகுத்து, அதற்கு ‘தமிழமுதம்’ என்று தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதெல்லாம் என்னை ரொம்ப ஈர்த்தது. என்னிடம் படித்த 40 பேரின் பெயர்களில் தமிழ் மொழி இல்லாமல் பிறமொழிகலந்து இருந்த நிலையில், தலைவரே வந்து போராளிகள் இயக்கத்துக்கு சேரும்போது பிறமொழயில் இருந்த பெயர்களை தமிழில் மாற்றலாம் என்று அறிவித்ததை அடுத்து, ‘ஜனனி’ என்ற பெயரில் இருந்த செஞ்சோலைப் பொறுப்பாளர் ‘சுடர் மகள்’ ஆகிவிட்டார். ‘ஜவான்’ என்ற பெயரைக் கொண்ட புலிகளின் குரல் பொறுப்பாளர் ‘தமிழன்பன்’ என மாற்றிக் கொண்டார்.
அதேபோல பிள்ளைகளின் பெயரையும் ‘அனிச்சம்’ என்றும் ‘அல்லி’ என்றும் ‘அன்புச்செல்வி’ என்றும் ‘ஜெயராணி’ என்ற பெயரை ‘தமிழரசி’ என்றும் நான் பெயர்களை மாற்றினேன். மாணவர்களும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள்.
இரண்டு ஆண்டுகளும் அந்தப் பெயர்களையே அழைத்துக்கொண்டார்கள். நான் வன்னியில் இருந்து நாட்டுக்கு திரும்பியபிறகும்கூட என்னுடன் தொடர்புகொள்ளும் போது ஈழநிலா என்பது போல அந்தப் பெயர்களிலேயே என்னுடன் தொடர்புகொண்டனர்.
அதுபோல ஒரு முறை செய்திவாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற போராளியை சந்திக்கும் வாய்ப்புக்
கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக