![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTsK4d7p88GhfXPIEbI4zArKL7HgZO6Y6Zae0q2tC7AXEtKqUS0m9wpm9W6Por3fv0-P7ZLbQHY3-6iYw3hqIOmTQ6YpAFT5kIZ0k9Nwone8RTlcO-TDQHYo0Je76Rcb46ien_GEjcyfF0/s320/tamil.jpg)
முடிவை நாடிச் செல்வது போல்
ஏதுமில்லா மாகாண சபை
போதுமென்பார் இருக்கையிலே
தமிழிங்கு வாழு மோடி - தோழி
எம் கலையிங்கு தேறு மோடி
சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச்
சாத்திரம் பேசிச் சதி செய்யும்
ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில்
தமிழ்தான் வளருமோடி தோழி
எம் கலைதான் மிளிருமோடி
பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து
எமக்காக அணைந்த மாவீரர்க்கு
ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது
தமிழை வளர விடுவாரோடி தோழி
எம் கலையை ஒளிர விடுவாரோடி
வந்தாரை வாழவைப்பது பண்பாடடி
வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும்
ஆளவைத்து அடிமையாய் இருப்பது
இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி
நம்மை நாம் ஆள வேண்டுமடி
நம் மொழியோடு கலைவளர - தோழி
நம்மை நாமே ஆள வேண்டுமடி
கொத்தணிக் குண்டால் கொத்தாக விழுவோரும்
நாடுவிட்டு நாடு ஓடி நாதியற்று வாழ்வோரும்
ஓடும் படகு கவிழ ஒன்றாக தாழ்வோரும்
மீன் பிடிக்கச் சென்று உயிரிழப்போரும்
மொழியைப் பாதுகாப்பாரோ தோழி
கலையை வளர்ப்பாரோ
புலம் பெயர்ந்து வேறு நிலம் புகுந்து
பலம் மிகுந்த வாழ்க்கை வாழ்வோரும் - அங்கு
மொழியும் கலையும் உயிரிலும் மேலென்போரும்
ஓரிரு தலைமுறையில் எல்லாம் இழப்பாரடி - தோழி
மொழியோடு கலையும் மறப்பாரடி
எமது நிலம் எமக்கன்றி ஏதும் ஆகாதடி -தோழி
யாதும் எமக்கு இங்கு தேறாதடி
தாயகமண்ணில் தேசியம் பேணும் தன்னாட்சியின்றி
அமிழ்தினும் இனிய மொழிதான் எங்கடி - தோழி
எங்கள் பார் போற்றும் கலைதான் எங்கடி
சுவரின்றி ஓரு சித்திரம் வரைதல் முடியுமோடி
தாழ்வாரமில்லாதான் தேவாரம் படுதல் தகுமோடி
ஆதாரம் தர தன்னாட்சி நாடொன்றில்லாமல்
தமிழை யார் வளர்ப்பாரடி - தோழி
எம் கலையை யார் போற்றுவாரடி
நாடொன்று வேண்டுமடி தோழி
எம் மொழியோடு கலை வளர
தமிழீழத் திரு நாடிங்கு வேண்டுமடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக