வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பொங்கியெங்கள் ஊர்புகவே போர்க்கருவி துக்குவோம். போரில் பகை தொலையுமட்டும் ஊரினுள்ளே தாக்குவோம்.

வெள்ளிநிலா பால் சரித்து அங்கு விளையாடும்.
வீசுகின்ற காற்றுமெமைத் தேடுவிட்டுப் போகும்
பொன்னலரி பூச்சொரிந்து எம் வரவைப் பார்க்கும்
போக வழி ஏதுவுமின்றிக் கண்ணிரண்டும் வேர்க்கும்


ஊர் மனைக்குள் வாழ்பவரும் வேரிழந்த பேர்கள்
ஊளையிட்டுச் சாகிறதாம் நாம் வளர்த்த நாய்கள்
நாமெழுந்து போர் புரிந்தால் நாளையெங்கள் ஊரில்
நம்பியெழு ஊரினுக்குள் நாம் புகுவோம் தேரில்.



எங்கோ பாட்டுக் கேட்கிறது.
எம்மில் எத்தனை பேர் அர்த்தமுணர்ந்தோம்?
நரகில் கிடந்துழவும்
நாக்குக்கேதும் படைக்கவுமா நாம் பிறந்தோம்?
உருகியுருகி ஒன்றுமில்லாதாகி
எரியவா உயிரெடுத்தோம்?
வாழ்வு வெறும் வறண்ட நிலமாகி
தாழ்வுற்றுப் போகவா தமிழரென்றானோம்?
திருவோடும் கையுமாக தெருத்தெருவாக அலையவா
கருவுற்றுப் பெற்றாளெம் தாய்?
தளிரீன்றோம் நாம்?
வசந்தம் தழுவாது போனதா எம் பூக்காடு?
ஆமெனினும் அடங்கிப்போ.



இல்லையெனில் எழுந்து வா.
எதுவெனினும் முடிவெடுக்க இது தருணம்.
முடிசுமந்த தலையும்,
செங்கோலேந்திய கையும்,
கொற்றப்பந்தர் வீற்றிருந்த இனத்தின் வேர்நுனி,
நீர் குடிக்க வலுவற்று நெருப்பிடை வீழ்வதா?
புழுதி பறக்கக் குதிரைப்படை போன தெருவிலின்று
குருதிச் சேறு.
தேருலாவிய வீதியில் யாரோவொருவனின் கவசவாகனம்.
பகைவென்று வரும் போது
மகரதோரணம் விளங்கிய வாசலில்
எதிரியின் காவலரண்.
எப்படிப் பொறுப்பாய் மகனே!
எழுக என் மகளே!
நிலத்தில் இறங்குக இளைய விழுதுகள்.
களத்தில் இறங்குக தமிழர் கொழுந்துகள்.
நிமிர்ந்து கொள்ளுங்கள்
முகிலுமக்கு முகம் துடைத்துக் கொள்ளட்டும்.
எல்லாமிழந்து இல்லாதோரானோம்.
உயிர்க்கூட்டை வீட்டுத் தாழ்வாரத்தில் வைத்துவிட்டு
சதைக்கூடென ஜடமாகிப் போனோமெனினும்
பணியோம் நாம்.
இன்னும் வரட்டும் ஏழ்மை.
ஆயினும் இழிவற்றுனக்கு ஏவல் செய்யோமென
எதிரிக்கு உணர்த்துவோம் வருக.
பிடிசாம்பலானாதா எம் வெருவாழ்வு?
இல்லை……. இல்லையடா.
திக்கெட்டுமதிர பகைக்கொன்றுரைப்போம்.
அறுகுப்புல்லின் மயிரைப் பொசுக்கலாம்.
வேரையறுத்து விழுத்தவா முடியும்?
எம் முற்றம் முழுதும் எருக்கலை நாட்டலாம்.
காடாகிப் போகலாம் தாய்மடி.
மீண்டுமெழுவோம் எம் முற்றத்தில்.
உன் மூச்சுத் திணற முளைப்போம்.
இருந்து பார் பகையே! இது நடக்கும்.
எம்மைக் கொல்வாய்.
எம் பிள்ளைகளியும் கொல்வாய்
கொன்றெங்கே புதைப்பாய்?
நீ புதைக்குமிடம் புதைகுழியல்ல…
அடை வைக்கும் இடமென்று அறிவாய் விரைவில்.
கல்லாலெறிந்து கலைத்தாய் எம்மை.
உள்ளே பிடித்துச் சென்றாய் உறவை.
இரண்டுமே உனக்கு எமனாச்சு.
உள்ளும், புறமும் உனக்கு நெருப்பு மூட்ட



நீயே வழி சமைத்து தந்துள்ளாய்.
உன் சீருடையில் தீப்பிடிப்பது தெரியாமல்
சிரித்த படி ஆரியகுளத்தடியில் அமர்ந்துள்ளாய்.
ஐயோ பாவம்.
எரிமலை வாசலை அடைத்தபடி
இன்னும் எத்தனை நாளிருக்கும் உத்தேசம்?
ஆனந்த வாழ்வு அடிவரை வற்றி
வறுமையுற்றுளது எம் நாளாந்தம்.
இல்லிழந்த வாழ்வே இருப்பாகிக் கழித்தெம்
“வாழ்வு முற்றிற்று” எனத் திரை விழுந்து போமா?
இங்கோர் சுடலையில் எரியுண்டு போவோமா?
“பாறை பிளந்து பயிர்வளர்த்தோன்” பரம்பரை
சோர்ந்தோர் மூலையில் கிடத்தலென்ன விதி.
எம்மை ஊரிலிருந்து விரட்ட
உனக்கென்ன அதிகாரம்?
கூடியிருந்தும், தனித்தும்
பாடியிருந்தும் மகிழும் சூழலே பரவசம்.
வெறும் நிலமல்ல எம் ஊர்.
மண் மீது விரியும் ஆனந்தச் சிறகே
ஊர்வாழ்வின் வேரென்றாகும்.
இரண்டுமே இல்லையென்றாயின்
ஊரென்பது வெறும் கல்லும் மண்ணும் கலந்த
கலவை என்றாகி விடும்,
விண்ணதிர, மண்ணதிர, விரிந்தகடலதிர
கண் திறந்து வருக நம் கருப்பை உயிர்கள்.
கொற்றவை பெற்ற குழந்தைகளென
நெற்றிக்கண் திறந்து நிமிருக நம் பரம்பரை.
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளை களத்தில்…..
என் பிள்ளையும் களத்திலென்று
எல்லோரும் சொல்லின்ற எழுச்சி நிலை கைவந்தால்
மண்வந்த பகையன்றே மடிந்து விழ மாட்டாதோ?


பொங்கியெங்கள் ஊர் புகவே போர்க்கருவி தூக்குவோம்
போரில் பகை தொலையுமட்டும் ஊரினுள்ளே தாக்குவோம்
தம்பி பிரபாகரனின் தானையிலே சேருவோம்
தங்கத் தமிழீழம் வரும் நேரம் வரை சீறுவோம்.



- ஆனி 1996 -

கருத்துகள் இல்லை: