வியாழன், 29 ஆகஸ்ட், 2013

வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல.....

“இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுகந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.”
பாரதி!



சுகந்திர தேவியின் பாதங்களை வருடி
ஆயிரம் வரிகளால் அர்ச்சித்த பாவலனே!
எட்டயபுரத்து அரசே!
எங்களுக்காகவா எழுதினாய் இப்பாட்டு?
கைதொழத் தக்க கவிஞனே!
காலம் கடந்தாலும் நீளும் உன்குரல்
இன்றுமெம் காதில் ஒலிக்கிறது.
நெருப்பிற் புதைத்து பழுக்கக் காய்ச்சிய சொற்களால்
பொய்யில்லாப் பாடல் புனைந்தவனே!
விடுதலையை விரும்புறும் எவருக்கும்
உன்பாடல் உருவேற்றும்.



விடுதலை! விடுதலை! விடுதலை!!!! என்று
உன் இதயக்குகையெங்கும் இருந்தது விடுதலை.
எம் தேசத் திசையெங்கும் எழுவதும் விடுதலை.
விடுதலை என்பதின் விளக்கமென்ன?
சுகந்திரத்தின் சுருதிப் பொருள் யாது?
அனுபவத்தறியாததிற்கு உவமை கூற முடியாது.
கற்பனையிற்தான் கொஞ்சம் கண்டு கொள்ளலாம்.
விடுதலையை விரித்துக்குரைக்க முடியாதெனினும்
இது காற்றைப் போல ஒரு உல்லாசம்.
கட்டளையற்றுப் பொழியும் மழை போன்ற சல்லாபம்,
சிட்டுக்குருவியின் சிறகசைப்பை போல ஆனந்தம்.
அதிகாலை இதழ் விரிக்கும் மல்லைகைப் பூவின் பரவசம்.
மலைதழுவும் கருமுகிலின் மகிழ்ச்சி.
இரு என்று சொல்லவும்,
எழு என்று உத்தரவிடவும்,
எஜமானர்களற்ற இருப்பு.
என்னை நானே தீர்மானிக்கும் வாழ்வு.
இதுவே விடுதலை.
அதற்காகவே போராட்டம்.
அப்படியா?
கற்பனையிற்கூட எத்தனை ஆனந்தம்.
கைவிலங்குகளற்ற கைதிகளாக வாழ்வதிலும்
மூச்சைச் திறந்து முடிந்து விடுவது மேலானது.
எம் ஊரில்
எம் வீட்டில்
சுற்றம் சூழ இருப்பது மட்டும் சுதந்திரமல்ல.
எம் வாழ்வை இன்னொருவன் தீர்மானிப்பது
விடுதலையுமல்ல.
பட்டிமாடுகளின் கழுத்தில் கயிறில்லை என்பதற்காக
மாடுகள் சுகந்திரமானவை என்று சொல்ல முடியுமா?
கூண்டுக் கிளியை கொஞ்சி மகிழ்வார்கள்
பறந்துசெல்லப் பார்த்திருப்பார்களா?
இன்னொருவனுக்குக் கீழே இருந்து கொண்டு
என்னை நானே தீர்மானிக்கின்றேனென்பது
எவ்வளவு வேடிக்கையானது?
வீட்டு நாய் விறாந்தையில் ஏற முடியும் என்பதற்காக
நான் சுகந்திரமானவனென்று
நாய் எப்படிக் கூறமுடியும்?
இன்று



ஊருக்குபோன உறவுகளெல்லாம்
“ஆனந்த சுதந்திரம்” அடைந்துவிட்டோமென்று
பாட்டுகள் பாட பகைவன் விடுவானா?
சின்னத்திரையில் வண்ணப்படம் பார்ப்பதும்,
“சீமைச் சரக்கில்” வாய் நனைத்துக் கொள்வதும்,
பள்ளிக்குச் போவதும்,
பரீட்சை எடுப்பதும்,
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பதும்
விடுதலையல்ல.
விளக்குவராதே,
ஆறு மணிக்குள்ளே அடங்கிப்போ என்றதும்,
கூனிக்குறுகிக் கிடப்பதும் சுகந்திரமல்ல…
எம்வீட்டில்,
எம் ஊரில்
தும்மவும், இருமவும் அனுமதிபெற வேண்டுமென்றால்
அந்த வாழ்வு யாருக்கு வேண்டும்?
எந்தையர் பூமியில் உலா வரும் உரிமம் கூட
எமக்கில்லை என்றான பின்பு
சும்ம மூச்சு விடுவதற்குப் பெயர் சுதந்திரமென்றால்
சொன்னவன் மனிதல்ல.. சொற்றுப் பிண்டம்…
கைகட்டி சேவகம் செய்பவனுக்கு
காற்சட்டை வேண்டியதில்லை.
வெட்கமென்ன வெட்கம்?
நிர்வாணமாகவே நிற்கலாம்.
அடிமை வாழ்வில் அழுந்திக் கிடப்பவனுக்கு
தோலின் துவாரத்தில் வியர்வை கசிவதில்லை.
நாயாய் கிடப்பவனுக்கெதற்கு கோவிலும், குளமும்?
சுதந்தரமற்ற ஊரில் திருவிழா எதற்கு?
நான் நானாக இல்லையென்றான பின்னர்
தேனென்ன? திரவியமென்ன?
உன்னுடலுக்கெதற்கு உணவென்று
நாக்குக் கூட நகைத்துக் கொள்ளும்.
ஊரிலிருந்தல் உன்னதம் தான்
ஆனால், அடிமையற்று இருத்தல் வேண்டும்.
ஏவல் செய்து கொண்டு இந்திரபுரியில் இருப்பதிலும்
சுகந்திரமாக வனாந்தரத்தில் வாழ்வது சுகமானது.
அச்சத்தோடு அரியணையில் இருத்தலிலும்
பயமெதுமன்றி தரையிலிருத்தல் தாழ்வன்று.



கைவீசிக் கொண்டு காட்டிலிருத்தலே ஆனந்தம்.
வாய்பொத்திக் கொண்டு வலிகாமத்தில் வாழ்வதிலும்
வாய் திறந்து பாடி வன்னியிலிருத்தல் மேலானது.
ஊர்வந்த பகை தொலைத்தெம் பிள்ளைகள் வருவர்.
தலைவன் கொடியெற்றினானென்னும் செய்தியும் வரும்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே” என்று மகிழ்ந்து
பரந்தன் வீதியில் பாடிக் கொண்டும்,
ஆனையிறவால் ஆடிக்கொண்டும்
நாமுமெம் ஊர் புகுவோம் ஓர் நாள்.
அன்று வலிகாமம் மட்டும் மீட்டதாய் இராது.
தேசம் முழுமையும் எம் வசமானதாய்,
“தமிழீழம்” எல்லையிடப்பட்டு தனிநாடானதாய்
விடுதலையின் மெய்ப்பொருள் உணர்ந்ததாய் இருக்கும்.
உறுதி குலையாது ஒருவன் உள்ளான்
அவனெம் தலைவன்.
மானம் பெரிதென்ற மகுடம் அவன் தலையில்.
ஈனம் துடைக்கின்ற இறுமாப்பு அவன் நெஞ்சில்,
வானம் இடிந்தாலும் வளையாத மனமுண்டு.
வரிவேங்கைப் படைவென்று வருமென்ற திடமுண்டு.
அடிமைத்தனத்தில் உழலும் உறவுகளுக்கு
சுகந்திரதேவி!
உன் கண்ணின் ஒளி கொடு.
நிமிர்ந்தெழ நெஞ்சில் உரம்கொடு.
விடுதலை எம் மூச்சு.
விடுதலை எம் வாழ்வு.
அடிமை நரகில் அழுந்திக் கிடப்பதிலும்
விடுதலைக்காக எழுந்து வீழ்ந்து மடிந்தாலும்
அது பெருவாழ்வெனப் பெருமை கொள்வோம்.
ஒன்றே தேசம்.
ஒருவனே தலைவன்.
வென்றே வருவோம்.
விடுதலை பெறுவோம்.


- வைகாசி 1996 -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக