தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எவ்வாறு கையாண்டார் என்பதை எடுத்தியம்பும் இரண்டு சம்பவங்களை, மணலாற்றுக் காட்டில் தலைவருடன் இருந்த நண்பர் கூறிய சம்பவங்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்திய இராணுவத்தின் இறுக்கமான முற்றுகைக்குள் இருந்தது மணலாற்றுக்காடு. பல்லாயிரக்கணக்கான இந்திய துரும்பினர் தலைவரை அழிப்பதற்காகக் காட்டைச் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருந்த காலப்பகுதி. உணவு, வெடிபெருள் தொடங்கி போராட்டத்தை கொண்டு நகர்த்துவதற்கான பொருட்களை மணலாற்றுக்காட்டுக்குள் நகர்த்துவது என்பது ஒரு சவாலான விடயமாகும். இந்திய இராணுவத்தின் ரோந்து, பதுங்கித்தாக்குதல்களை சமாளித்தே பொருட்களை காட்டு முகாம்களிற்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
மணலாற்றிற்குச் சாமான் வருவதாயின் இந்தியாவில் இருந்து தான் வரும். அதேநேரம் அலம்பிலில் இருந்த சில ஆதரவாளர்கள் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் என்றழைக்கப்படும் பகுதிக்கு மீன்பிடி வள்ளத்தில் ஜொனி மிதிவெடி செய்வதற்கான சாமான்களையும் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி வரும் சமயங்களில் ஜந்து, ஆறு சாப்பாட்டுப்பாசல்களையும் கொண்டு வருவார்கள். இப்படியாக வரும் சாமான்களை நடந்து சென்று தான் தூக்கிக்கொண்டு வரவேண்டும். அதை ‘கம்பாலை அடித்தல்’ என்றழைப்பர்கள். அநேகமாக மணலாற்றுக்காட்டில் கம்பாலை அடித்த அநேகமானவர்களிற்கு நாரிவருத்தம் இல்லாமல் இருக்காது. அவ்வளவு சுமைகளை தூக்கி வரவேண்டும். கடுமையானதென்றாலும் கம்பாலை அடிக்கபோக வேண்டும் என்றால் போராளிகள் நான் நீ எனப் போட்டி போட்டுப் போவார்கள். ஏனென்றால் சாமான் வரும் படகில் நல்ல சாப்பாடு வரும் அதைச் சாப்பிடுவதற்காகத்தான் முந்தியடிப்பார்கள். முகாமில் வழமையாக உப்பில்லாமல் தண்ணீரில் அவித்த பருப்பும் சோறும் தான் உணவாகக் கிடைக்கும் இது மட்டுமே நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கான ஒரேயொரு வாய்ப்பு.
அத்துடன் வண்டியில் உணவுப்பொருட்கள் வரலாம் எனவே கம்பாலைக்குச் சென்றால் வண்டியில் வரும் உணவுப்பொருட்களில் சிலவற்றை சாப்பிடலாம் என்ற நப்பாசையுடன் கூடச் செல்வார்கள் ஆனால் அதில் சைக்கிள் ரியூப், சிறிய கம்பிகள் அடங்கிய பொதிகளே கூடுதலாக வரும். காட்டில் இந்திய இராணுவத்தின் சுதந்திர நடமாட்டத்தைத் தடுத்து அச்சத்தை ஏற்படுத்திய ஜொனி மிதிவெடிகள் செய்வதற்கான மூலப்பொருட்களில் சிலதான் அவை. அதில் ஒரு பொதி தலைவருக்கு என்று தனியே வரும் அதில் தலைவருக்கான முக்கிய பொருட்கள் மட்டுமே இருக்கும். சமான்களை கொண்டு வந்ததும் நேரடியாகத் தலைவர் இருந்த கொட்டிலுக்கு முன் வைப்பார்கள்.
சாமான்களை இறக்கிவைத்துவிட்டு போராளிகள் வரிசையாக இருப்பார்கள். தலைவர் எல்லாப்பொதிகளையும் எங்கெங்கு கொடுக்க வேண்டும் எனப்பிரித்து விட்டு, தனக்கு வந்த பொதியை எப்போதும் எல்லோர் முன்னிலையிலுமேயே வழமையாகப் பிரிப்பார்.
அப்படியொரு ஒருநாள் பொதியைப் பிரித்தபோது, பற்றி உட்பட முக்கியமான சில பொருட்கள் இருந்தன. அவற்றுடன் இரண்டு ‘நெஸ்ரமோல்ட்‘ ரின்களும் வந்திருந்தன. கிச்சினுக்குப் பொறுப்பானவரை உடனடியாக அழைத்து, இரண்டு ரின்களையும் கொடுத்து கரைத்துக் கொண்டுவரும்படி கூறினார். அதை அங்கிருந்த எல்லோருக்கும் குடிக்கக் கொடுத்துவிட்டே பொதிகளை தான் சொன்ன இடங்களிற்கு கொண்டு போய்க் கொடுக்குமாறு கூறினார்.
இன்னுமொரு தடவை பல் துலக்க பற்பசை கொண்டு வருமாறு சொல்ல, ஒரு புதிய பற்பசையைக் கொண்டுவந்தார் போராளி. அதைப் பார்த்துவிட்டு ‘நேற்று கொண்டு வந்த பற்பசை எங்கே?‘ எனக்கேட்டார். அதற்கு அவர் ‘முடிந்துவிட்டது அண்ணை அதுதான் அதை எறிந்து விட்டு இதைக் கொண்டு வந்தேன்’ எனச் சொன்னார். உடனே தலைவர் அந்த பற்பசையை எடுத்துவரும்படி கூறினார். அவரும் பற்பசையை தேடி எடுத்து வந்தார். அது முழுமையாக முடிந்திருக்கவில்லை.
தலைவர் அந்தப் பற்பசை ரியூப்பை பின்பக்கத்திலிருந்து மடித்துக் கொண்டுவர அதிலிருந்த பற்பசை முன்னுக்குவந்தது. அதையே பயன் படுத்தினார். அவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை அந்தப் பற்பசையைப் பயன்படுத்திவிட்டு, அந்தப்போராளியிடம் ‘‘எங்களை நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்துவதற்கு மக்கள் பணம் தருகின்றார்கள், அதில் அவர்களது வியர்வையும் நம்பிக்கையும் இருக்கின்றது. நாங்கள் மக்களின் பணத்தை ஒருபோதும் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது. தவறாகவும் வீணாக்கக்கூடிய வகையிலும் பயன் படுத்தக்கூடாது. இனிமேல் பற்பசை முடிந்ததும் என்னிடம் கொண்டு வந்து காட்டிய பின்னரே புதிது எடுக்கவேண்டும்” என்று கூறியனுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக