வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது – பி.ஏ.காதர்

பலஸ்தீனியர்களின் அனுபவம்:
ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது.
1
1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் – அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் – அதாவது 4,966,700 பேர் – தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்(1167,572) மேற்கு கரையிலும் (1167,572 பேர்) உள்ள 58 அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் அகதிகளாக இருக்கின்றனர்.
2
இன்று பலஸ்தீனியர்கள் நடத்தும் போராட்டம் கூட தங்கள் தாய்மண்ணில் அரசியல் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய குடியேற்றத்தை அப்புறப்படுத்துவதற்கான – அக் குடியேற்றங்களுக்கு எதிரான தாய் மண்ணுக்கான போராட்டமாகும். அன்று அவர்கள் தமது மண்ணைவிட்டு ஓடியதற்காக இன்று கூட அவர்கள் போராட வேண்டியுள்ளது.
3
கீழே தரப்பட்டுள்ள தேசப்படம் பலஸ்தீன நில அபகரிப்பின் குரூர முகத்தை நன்குபுலப்படுத்துகிறது.
4
பலஸ்தீனத்தில் காலகாலமாக யூதர்கள் வாழ்ந்த போது அராபியர்களுக்கும் அவர்களுக்குமிடையில் மோதல் நிலைமை இஸ்லாமியர்களின் ஆட்சிகாலத்தில் பெரும்பாலும் இருக்கவில்லை – இருசாராரும் சமாதான சக ஜீவனம் நடத்திவந்தனர். ‘சியோன் அழைக்கிறது’ என்ற வாசகம் அவர்களது மதத்தோடு இணைந்த கோசமாக இருந்த போதும் அது ஒரு ஆன்மீக எண்ணமாகவே இருந்தது – அரசியல் கோசமாக இருக்கவில்லை.
யூத அரசுபற்றிய எண்ணம் அராபியர் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் மத்தியிலிருந்து உருவாகவில்லை. துருக்கியின் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் கீழ் இருந்த பலஸ்தீனம் இன்னும் நிலபிரபுத்துவ தன்மை மிகுந்ததாகவும் பின் தங்கியதாகவும் இருந்தது. நவீன முதலாளித்துவத்தின் தாக்கம் மந்தமாகவே இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தமான தேசியவாதத்தின் பாதிப்பு இங்கு குறைவாகவே இருந்தது. இதனாற்றான் மத்திய கிழக்கிற்கு வெளியே முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து தேசியவாத சித்தாந்தத்தில் பழக்கப்பட்ட யூதர்களின் மத்தியிலிந்து அரசியல் சியோனிசம் உருவானது.
மேற்கு ஐரோப்பாவில் யூதவிரோத சித்தாந்தம் (anti- Semitism) தீவிரமடைந்து யூதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி யூதப் படுகொலைகள் நடைபெறத்தொடங்கிய போதே தமக்கென தனியான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாக் கொண்ட அரசியல் சியோனிசம் (Political Zionism) மேற்கு ஐரோப்பாவில் உருவானது.
19ம் நூற்றாண்டின் முடிவிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் அடிக்கடி இடம்பெற்ற இனப்படுகொலைகளும் யூதர்கள் மீது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் விதித்த குடியேற்ற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வந்த யூத விரோதப் போக்கும் யூத வெளியேற்றத்தை ஊக்குவித்தது. 1882 முதல் 1903 வரையிலான இக்காலப்பகுதியில் சுயமான பலஸ்தீனத்திற்கு பாதுகாப்புத் தேடி சென்ற யூதகுடிப் பெயர்வு முதலாவது அலியாஹ் (First Aliyah) எனப்படுகிறது.
இவ்வாறு பாலஸ்தீனம் சென்றவர்களின் தொகை 25,000 முதல் 35,000 வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் சிறு சிறு கூட்டங்களாக அங்கு சென்றதாலும் அவர்களிடம் அரசியல் நோக்கு இல்லாததாலும் – யூதர்களின் எண்ணிக்கை சில பகுதிகளில் அதிகரிப்பது அங்கு வாழ்ந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டு வந்த போதும் கூட- அவர்களுக்கு அங்கு பெரிய எதிர்ப்பு இருக்கவில்லை.
இனமோதல்கள் மிக அரிதாகவே அக்காலப்பகுதியில் ஏற்பட்டது. பென்னி மொரிஸ் (Benny Morris) என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி 1882 டிசெம்பரில் தான் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஒரு சிறு இனமோதல் முதற்தடவையாக பதிவாகியிருக்கிறது. அதுகூடத் தற்செயலாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவமே. சபெட் Safed என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பதிய யூத குடியேற்றத்தை காவல் செய்து கொண்டிருந்த யூதன் ஒருவன் ஒரு அராபியனை தற்செயலாக சுட்டு கொன்றுவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 200 அராபியர்கள் அந்த யூத குடியேற்றத்தைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். ஆனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்தும் அந்த யூத குடியேற்றம் அங்கு இருந்தது.
இதனை விடச் சற்று மோசமான – ஆனால் சிறிய – இன்னொரு சம்பவம் 1886 மார்ச் மாதம் பெட்டா டிக்வாக் Petach Tikvag பகுதியில் இடம்பெற்றது. அதில் ஐந்து யூதர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒரு வயோதிப மாது நான்கு நாட்கள் கழித்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
யூதர்களுக்கென ஒரு தனியான அரசு ஜெருசலத்தை மையமாகக் கொண்டு பலஸ்தீனத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக முன் வைத்தவர் வியன்னாவில் வாழ்ந்த ஒரு யூத பத்திரிகையாளர். அவரது பெயர் தியோடர் ஹேர்சல் (Theodor Herzl). இவர் 1896 ல் எழுதிய ‘யூத அரசு’ (Der Judenstaat) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட யூதர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தமக்கென தனியான ஒரு அரசு தேவை என்ற கருத்தை ஆராய்வதற்காக முதலாவது சியோனிச மாநாடு 1897 ல் சுவிட்சலாந்திலுள்ள பாசல் நகரில் கூடியது.
இம்மாநாடு பலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்குவதற்கான திட்டத்தை பாசல் வேலைத்திட்டம் என்ற பெயரில் தீட்டியது. இது வகுத்த திட்டமிட்ட குடியேற்றத் திட்டமே படிப்படியாக யூத – பலஸ்தீன உறவை மோசமடையச் செய்தது. இத்தகை திட்டமிட்ட குடியேற்றங்கள் Second Aliyah – இரண்டாவது அலியாஹ் என்றழைக்கப்படுகிறது.
ஆயினும் ஒரு வித்தியாசம். இக்குடியேற்றங்கள் இஸ்ரேல் என்ற நாட்டை மே 14ம் திகதி 1948 – தனது மென்டேட் முடிவுக்கு வருவதாக பிரித்தானியா அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பதாக – டேவிட் பென் குறியன் David Ben-Gurion பிரகடனப்படுத்தும் வரை எந்த அரசாலும் மேற்கொள்ளப்படவில்லை. அவை யாவும் மிகவும் திறமையான முறையில் தமது நவீன அறிவாற்றலைப் பயன்படுத்தி நுட்பமான முறையில் வெளிநாடுகளில் வசித்த யூதர்களால் அமைக்கப்பட்ட – JNF என சுருக்கமாக அழைக்கப்படும் – Jewish National Fund யூத தேசிய நிதியம் என்ற சியோனிச தொண்டர் நிறுவனத்தினூடாவும் யூத காலனியல் டிரஸ் Jewish Colonial Trust என்ற வங்கியினூடாகவுமே மேற்கொள்ளப்பட்டது. யூத தேசிய நிதியத்தைப் போன்ற மற்றொரு அமைப்பை உலக வரலாற்றில் வேறெங்கும் காணமுடியாது. இதன் மறுபக்கம் குரூரம், கபடத்தனம், சூழ்ச்சிகள், வன்மம் அனைத்தையும் கொண்டது.
திட்டமிட்ட அரசியல்ரீதியான குடியேற்றங்கள் அமைக்கப்படத் தொடங்கிய பின்னர் இன உறவு அங்கு படிபடியாக மோசமடைந்து தீவிரவடித்தை எடுக்கத் தொடங்கியது. 1908ல் ஏற்பட்ட தேசியவாதத் தன்மை வாய்ந்த மோதலில் 13 யூதர்களும் 4 அராபியர்களும் கொல்லப்பட்டனர். இது யூத அராபிய இன உறவு மோசமடைவதன் தொடக்கத்தைக் குறித்தது. யூத குடியேற்றத்திற்கு எதிராகவே அராபு தேசியவாதம் உருவானது.
1908ல் ஹய்பாவில் பிரசுரமான முதலாவது அரபு பத்திரிகையான அல் கார்மில் (al-Karmil) யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்யவேண்டாம் என்ற கருத்தை வெகுவாக பிரச்சாரம் செய்தது. 1918 நவம்பர் மாதம் ஜபாவிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லீகளும் ஒரு கூட்டமைப்பை யூதர்களின் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக ஆரம்பித்தனர்.
1920 பெப்ரவரி 27ம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருமளவில் வரத்தொடங்கிய யூதர்களின் வருகையைக் கட்டுப்படுத்தக் கோரி ‘எமது நாடு எமக்கே’ என்ற கோசத்தின் கீழ் ஆயிரத்துக்கும் அதிகமாக அராபியர்கள் ஜெருசலேத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதற்கு பிரித்தானியா உரியமுறையில் செவி சாய்க்காததால் மார்ச் முதலாம் திகதி டெல் ஹாஜ் என்ற யூத குடியேற்றத்தின் மீது அராபிய இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். இதில் எட்டு யூதர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் மார்ச் மாதம் 8ல் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் ஒன்று யூத குடியேற்றத்திற்கு எதிராக ஜெருசலத்தில் நடைபெற்றது.
இச்சமயத்தில் அகண்ட அராப். மத-தேசியவாதியான (Pan- Arab Islamic Nationalist) முகம்மது அமின் அல் Muhammad Amin Al-Husayniயின் ஆதரவாளர்கள் அதே ஆண்டு ஏப்ரல் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் யூதர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 46 யூதர்கள் கொல்லப்பட்டனர். இது நிபி மூசா அராபு கலவரம் ‘Nebi Musa” Arab riots’ என்றழைக்கப்படுகிறது. இதுவே யூதர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதரீதியில் தயாராக வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுவித்து. தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஹெகானா Haganah என்ற ஆயுத குழு தோன்றுவதற்கு இக்கலவரம் காரணமாயமைந்தது.
1921 மே 1 முதல் 7 வரை ஜபாவில் (Jaffa) நடைபெற்ற இனகலவரத்தின் போது 47 யூதர்களும் 48 அராபியர்களும் கொல்லப்பட்டனர். ஹெகானா ஆயுதக் குழு அராபியர்களைத் திருப்பித் தாக்கியது. ஆயினும் அதனால்த் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே ஆயிரக்கணக்கான யூதர்கள் எண்ணிக்கையில் கணிசமான சக யூதர்கள் வாழ்ந்த டெல் அவிவுக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர்.
(வரலாற்றில் இருந்து இன்னும் கற்போம்)
நன்றி: ஈழமுரசு

கருத்துகள் இல்லை: