வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தேசியத்தலைவர் பற்றி.........!


தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளை புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பண்முக பண்புகளே அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. இதைச் வெளிப்படுத்தும் இரு சம்பவங்களை இங்கே பார்க்கலாம்.
 
ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கி போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன் சாப்பிடும் எண்ணம் ஏற்பட்டது. உடனே மீன் வாங்கும் படி கூறி, வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்த பாதுகாவலர் பின்னுக்கு வந்த பாதுகாப்பு வாகனத்தில் வந்தவர்களிடம் மீன் வாங்குமாறு கூறினர். சிறிது நேரத்திலேயே மீன் வாங்கியாகிவிட்டது என தெரிவித்தனர். தலைவர் ‘என்ன இவ்வளவு கெதியா வாங்கிட்டீங்களா?’ எனக் கேட்க, அந்தப்போராளியும் ‘ஓம் அண்ணை வாங்கியிட்டம்’ எனக் கூறினார். பின்னர் வாகனங்கள் புறப்பட்டு முகாமிற்கு சென்றது. 
 
வாகனத்திலிருந்து இறங்கிய தலைவர்  ‘எங்க மீனைப்பாப்பம்’ என கேட்க அவர்கள் பெட்டிக்குள் இருந்த மீனைக்காட்டினார்கள். ஆச்சரியமைந்த தலைவர், ஏன் பெட்டியுடன் வாங்கினீர்கள் எனக் கேட்டார். அதற்குப் போராளி ‘நாங்கள் ஜந்து கிலோ கேட்டனாங்கள், அவரிடம் ஜந்து கிலோ மட்டில் இருந்ததால் அப்படியே எடுக்கச் சொன்னவர். எங்களிட்ட பை ஒன்றும் இல்லை, ஆதால பெட்டியுடன் தாறீங்களா? அதுக்கும் காசு தருகின்றோம் எனக் கேட்டேன், வியாபாரியும் ‘மறுக்காமல் சரி என்று சொன்னார். அதோட அந்த இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு தாமதிக்க விரும்பவில்லை எனவே அப்படியே வாங்கிக் கொண்டு வந்திட்டன்’ என்றனர்.
 
அதற்குத் தலைவர் ‘நாங்கள் இயக்கம் என்டபடியால், கேட்டதை சனம் மறுக்காமல் தருவினம் ஆனால் ஒவ்வாரு மனிதனும் எதாவது ஒரு பொருளை அதிஸ்டமாகக் கருதுவினம், அதுபோன்று இந்த வியாபாரிக்கும் அந்தப்பெட்டியில் மீன்வித்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். சிலவேளை நாளைக்கு புதிய பெட்டி வாங்கி வியாபாரத்திற்குச் செல்லும் போது, சரியாக வியாபாரம் போகாவிட்டால், அதிஸ்டமான பெட்டியை பெடியள் கேட்டதால கொடுத்திட்டனே என்று கவலைப்படக்கூடும். இந்தக் கருத்து மனைவி, பிள்ளைகளிற்குகூட ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. இது இயக்கத்தைப்பற்றிய ஒரு தவறான பார்வையை மக்களிற்குள் தோற்றுவிக்கும். எனவே நீங்கள் நாளை எப்படியாவது இந்தப்பெட்டியை வியாபாரிக்கு கிடைக்கச் செய்து விடுங்கள்’ என்றார்.
 
மறுநாள் மீன் வாங்கிய இடத்துக்குச் சென்று அதிலுள்ள மக்களிடம் மீன்வியாபாரியின் வீடு எங்கிருக்கின்றது என தேடிக்கண்டு பிடித்து, அந்தப்பெட்டியை திருப்பிக் கொடுக்க வியாபாரி வியப்படைந்து ஒரு புண்முறுவலுடன் வாங்கிக் கொண்டார். அன்று மதியம் மீன் வாங்கிய போராளியை அழைத்த தலைவர் ‘மீன் பெட்டியைக் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா?’ என அவ்வளவு வேலைகளிற்கு மத்தியிலும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
 
பிறிதொரு சம்பவத்தில்  தலைவர் காலையுணவருந்திக் கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அண்ணை அலுவலாக வந்திருந்தார். அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணை வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை  சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.
 
சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.
 
பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்டு முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க,  தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரன்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.
 
இது தனிமனிதர்கள் மீதும் அவர்களின் தனிமனித உணர்வுகளிற்கு தலைவர் கொடுக்கும் முன்னுரிமை, மதிப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இதனூடாக  போராளிகளை மனிதநேயம் மனிதப் பண்புகள்  உள்ளவர்களாக உருவாக்குவதன் மூலம், இப்போராளிகாளால் உருவாக்கப்படும் சமூகம் ஒரு நன்நெறி மிக்க சமூகமானவும்  நல்ல சிந்தனைகள், நற்பண்புகளைக் கொண்ட சமூகமாகவும் அடுத்தவர்களின் உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதை, தன்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் ஒரு தெளிவான பார்வை இருப்பதை வெளிக்காட்டுகின்றது.

கருத்துகள் இல்லை: