வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தலைவரின் உபாயம்


2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில்  ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது.
மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச்  செய்து கொண்டிருந்தது சிங்கள இராணுவம்.
தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அக்களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டளைத் தளபதிகள்,  தளபதிகள், களமுனைப் பொறுப்பாளர்கள்  அனைவரையும் தலைவர் கலந்துரையாடலுக்காக அழைத்திருந்தார்.  அங்கு கலந்துரையாடலுக்காக ஒன்று சேர்ந்திருந்த வேளையில், மோட்டர்  ஒருங்கிணைப்புத் தொடர்பான விடயங்களை கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது தலைவர் வந்தார். தலைவர் வரும்போது பானு அண்ணை மோட்டர் ஒருங்கிணைப்பைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தவர்.
கலந்துரையாடல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தலைவர் பானு அண்ணையிடம் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க, மோட்டர் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக கதைக்கின்றோம் அண்ணை என்றார். அதற்குத் தலைவர் 'அப்ப என்ன இன்னும் மோட்டர் ஓருங்கிணைச்சு முடியவில்லையா?’ எனக் கேட்டு விட்டு அமர்ந்தார்.
இயல்பிற்கு மீறிய இறுக்கம் தலைவரின் முகத்தில் காணப்பட்டது. கலந்துரையாடலை ஆரம்பித்த தலைவர் அண்மையகாலப் பின்னடைவையும் அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி இனி எவ்வாறு சண்டையை எதிர்கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி விளக்கினார். அதில் முக்கியமாக குறிப்பிட்ட விடயத்தின் சராம்சமானது.
‘‘இந்த சண்டை மிகவும் கடினமானதாக இருக்கும் எல்லோரும் இறுக்கமான யுத்தத்திற்கு தயாராகவேண்டும். எல்லாத் தளபதிகளும் தங்கள் பகுதி லைனுக்குக் கிட்ட நிலையமைத்து இருக்கவேண்டும். அந்தந்தப்பகுதிச் சண்டைக்கு அந்தப்பகுதிக்குப் பொறுப்பானவர் தான் பதில் சொல்லவேண்டும். தங்களக்குக் கீழ் உள்ள பொறுப்பாளர் திறமையாக செயற்படமாட்டார்கள் என்று நினைத்தால் அவர்களை மாற்றுங்கள். அதேவேளை உங்களிற்கு கீழ் உள்ளவர்கள் சரியாக செயற்படாமல் விட்டால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. வழமையாக கட்டளைத்தளபதிகளுடன் தான் சண்டையைப்பற்றிக் கதைத்துவிடுவன். இந்தமுறை நான் உங்களையும் கூப்பிட்டதற்குக் காரணம் உங்களிடம் இந்த பொறுப்பை விடுவதற்காதத்தான். ஒரு பகுதியில் சண்டை நடைபெறும் போது அதில் அப்பகுதிக்கான போராளிகளும் வீரச்சாவடைந்து தளபதியும் வீரச்சாவடைந்து இடங்களும் விடுபட்டால் நான் அதை ஏற்றுக் கொள்ளுவன். இடங்களும் விடுபட்டு போராளிகளையும் வீரச்சடையவிட்டு பொறுப்பாளர்கள் தப்பி வந்து காரணம் சொல்லக்கூடாது. பொறுப்பாளர்கள் நேரடியாக நின்று சண்டையை வழிநடாத்த வேண்டும்”  அத்துடன் தொடர்ந்து சொன்னார்.
‘‘நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமட்டன். ஒரு உண்மையான போராளி என்பவன் தனது கொள்கையைில வென்றிருக்க வேண்டும் அல்லது அதுக்காக வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அல்லாதுவிடின் அங்கவீனப்பட்டிருக்க வேண்டும் அதில்லாமல் நாட்டிற்கு நான் முழுமையாகச் செய்திட்டன் என்டு சொல்லமாட்டன்” என்று கூறினார் தலைவர். அப்போது தான் விளங்கியது எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டு வந்தார் என்பது.
இந்தக் கலந்துரையாடல் உளவியல்  ரீதியாகவும் மனோதிட ரீதியாகவும் ஒரு மிகையான உந்துதலைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். போராளிகளிற்கு  நம்பிக்கையைக் கொடுத்து மனோதிடத்தை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கலந்துரையாடலைக் கையாண்டார்.
ஏனெனில் தொடர் சண்டைகளால் ஏற்பட்ட காயம், வீரச்சாவு காரணமாக பல அனுபவம் மிக்க போராளிகள் யுத்தமுனையின் பங்களார்களாக இருக்கமுடியவில்லை. எனவே அனுபவம் குறைந்த போராளிகளை வைத்து பலமான சிங்களத்திடம் விடுதலைப்புலிகளின் இயலுமையை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் இருந்தது.
ஒவ்வொருவரும் லைனை விட்டு அரக்காமல் சண்டையிடவேண்டும்
லைனுக்கு நெருக்கமாக களமுனைப் பொறுப்பாளர்களும் நிற்க வேண்டும் என்பது அங்கு லைனில் நிற்கும் போராளிகளுக்கும் ஒரு மேலதிக தெம்பைக் கொடுக்கும் என உறுதிபட நம்பினார். மற்றும் தன்னுடைய இச்செய்தி அடிமட்டப் போராளிகளிற்கும் அவர்களுடைய நேரடிப்பொறுப்பாளர்கள் ஊடாகச் செல்வது போராளிகளின் மனோதிடத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதைக் கணித்திருந்தார் என்றே கூறவேண்டும்.
அத்துடன் முன்னணி நிலையில் இருந்த தளபதி பால்ராஜ் தலைமையில் இரண்டாவது நிலையை அமைத்து அதில் ஒரு சண்டை முனையை ஏற்படுத்தியிருந்தார். இராணுவம் பின்னுக்கு நகர்ந்தாலும் தளபதி பால்ராஜ் அவர்களின் அணி அதற்கான முறியடிப்பைச் செய்யும் என்ற நம்பிக்கையை முன்னரங்கில் இருந்தவர்களிற்கு ஏற்படுத்தியிருந்தார்.
அவ்வாறே தீச்சுவாலைச்சண்டை நடந்தேறியது. அதிகாலை ஐந்து மணிக்கு கிளாலி மற்றும் கண்டற்பக்கத்தால் உடைத்துக் கொண்டு முன்னேறி அணிகளை உள்ளடக்கி பொக்ஸ் அமைத்தது இராணுவம். உடைத்தபகுதி நிலைகளைத்தவிர எவரும் நிலைகளை விட்டு பின்நகரவில்லை. காவரலண்களிற்குப்பின் இருந்த களமுனைத்தளபதிகளின் கட்டளை மையங்களில் கூட தாக்குதல்கள் நடைபெற்றன. யாரும் தமது இடங்களை விட்டு அகலவில்லை.
இதில் தளபதிகளான சோதியா படையணி சிறப்புத்தளபதி துர்க்கா,சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி கோபித், சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி வீரமணி, கிளாலிப்பகுதித்தளபதி போன்றவர்களின் கட்டளை இடங்களிலும் இராணுவம் தாக்குதலை  மேற்கொண்டான். அப்படியான சந்தர்ப்பத்திலும் தங்களது கட்டளைகளையும் வழங்கிக் கொண்டு, தமதிடத்தில் நடந்த சண்டையையும் எதிர் கொண்டனர். குறிப்பாக துர்க்கா அக்காவின் கட்டளையிடத்தை இராணுவம் சுற்றி வளைத்தான். செல்விழுந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டவேளை, தான் நின்ற இடத்தைச்சுற்றி செல் அடிக்குமாறு கூறிவிட்டு அவர்களும் தங்கள் நிலைகளில் இருந்து தாக்குதலை மேற்கொள்ள, இராணுவம் தடுமாறத்தொடங்கினான். இவ்வாறு ஒருவரும் நகராமல் சண்டையைச் செய்தனர்.
மூன்று நாள் கடுமையான யுத்தம். காவலரண்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட உலர் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு தீவிரமாகப் போரிட்டு தீச்சுவாலை நடவடிக்கையை வெற்றி கொண்டன புலியணிகள்.
தலைவரின் தந்திரோபாயமும் தன்நம்பிக்கையான வழிநடத்தலினதும், இறுக்கமான சூழலைக்கையாளும் திட்டமிடற்பண்பினதும் விளைவாக அமைந்ததுதான் தீச்சுவாலை வெற்றி.
''சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்'' - தலைவர் பிரபாகரன்.

கருத்துகள் இல்லை: