ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இலங்கை முழுவதும் வாழ்ந்த முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள்

‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள்,
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, 
ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. 
பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள்,
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, 
ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. 
பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், 
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, 
ஏனெனில் நான்  தொழிற்சங்கவாதியில்லை. 
பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், 
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, 
ஏனெனில் நான் யூதனில்லை.
பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், 
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, 
ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை.
பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், 
அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’
Eelamurazu logo leadநாசிக்களின் படுகொலைகளை எதிர்த்துவந்த Martin Niemöller என்ற ஜேர்மனிய நாட்டின் பாதிரியார் இரண்டாம் உலகப் போர் காலத்தில் எழுதிய வரிகள் இவை.
இன்றைய நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கும் இது நன்றாகவே பொருந்திவரும். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிப்பின் வெற்றி மமதையுடன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்குவதில் மட்டும் சிங்கள, பௌத்த பேரினவாதம் கங்கணம் கட்டியிருக்கவில்லை.
தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யும் அதேநேரத்தில், முஸ்லீம்களின் மீதான ஒடுக்குமுறையையும் அது ஆரம்பித்துவிட்டிருந்தது. முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லீம்களின் பண்பாட்டு வாழ்வியல் மீதும் மேற்கொண்டுள்ள வெளிப்படையானதும், மறைமுகமானதும் தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
1983ம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் சிங்களக் காடையர்களை ஏவி, தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை நடத்தியிருந்தது. 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டதால் கொதித்தெழுந்த சிங்களவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதனைக் காண்பிக்க முயன்றாலும், அதன் பின்னர் எத்தனையோ ஆயிரக்கணக்கான படையினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டு உடலங்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் தமிழர்களுக்கு எதிராக இன்னொரு இனக்கலவரம் வெடிக்கவில்லை. அவ்வாறானதொரு ‘இனக்கலவரம் இனி வெடிக்காது’ என தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் காணொளிச் செவ்வி ஒன்றில் மிகவும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
inakalavaram
விடுதலைப் புலிகளின் பலமே மீண்டும் ஒருமுறை இனக்கலவரத்தை ஏற்படுத்தும் துணிவை சிங்களப் பேரினவாதத்திற்கு வழங்காது என்பதை அந்தச் செவ்வியின் ஊடாக தலைவர் உணர்த்தியிருந்தார். அதுவே உண்மையாகவும் இருந்தது. விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் இனக்கலவரம் என்ற போர்வையில் சிங்களக் காடையர்கள் தமிழின வேட்டையில் ஈடுபட முன்வரவில்லை. தமிழர்கள் மீது மட்டுமல்ல, முஸ்லீம்கள் மீதும் தமது காடைத்தனத்தை அவர்கள் காண்பிக்க முயலவில்லை.
ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்துவிட்டதால் தமிழர்களையும், முஸ்லீம்களையும் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் அடக்கியாள முடியும் என்ற சிந்தனை சிங்களப் பேரினவாதத்திடம் ஆழமாகப் புதைந்துகிடப்பதை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உறுதிப்படுத்திவருகின்றன.
இதனால்தான் தமிழர்களை மட்டுமல்ல முஸ்லீம்களையும் இலங்கைத் தீவில் இருந்து அகற்றும் அல்லது அடங்கி வாழச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சிங்கள பௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்களுக்கு வந்தேறு குடிகளெனக் கூறிவரும் பௌத்த பேரினவாதம், தம்புள்ளவில் தொடங்கிய பள்ளி வாசல் மீதான தாக்குதலை, இன்று கொழும்பு கிராண்பாசில் உள்ள பள்ளிவாசல் வரையும் வியாப்பித்திருக்கின்றது.
இதுவரை 24 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.  கொழும்பு கிராண்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலுடன் இது முடிந்துவிடும் என்பதற்கில்லை. இன்னும் இன்னும் தாக்குதல்கள் விரிவடைந்து செல்லும் என்பதையே பௌத்த மதவாதிகளின் எச்சரிக்கைகள் உணர்த்தி வருகின்றன. சிங்களவர்கள் கொண்டாடும் வெசாக் கொண்டாட்டத்தின் போது விகாரை ஒன்றைத் தாக்கியிருந்தால் சிங்களப் பேரினவாதம் எவ்வளவு தூரம் கொந்தளித்திருக்குமோ, அதேயளவிற்கு தங்கள் புனித நாளான ரம்ழான் நிறைவு வேளையில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் முஸ்லீம்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இது இன்னொரு இனக்கலவரத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. ஆனால், மகிந்த பேரினவாதத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் முஸ்லீம் தலைமைகள் இதனை உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘மகிந்தவின் தாளத்திற்கு எல்லாம் ஆட முடியாது’ என்று அடம்பிடிக்கும் நீதியமைச்சராக இருக்கும் ரவூப் ஹக்கீமினால் கூட பள்ளி வாசல்கள் மீதான தாக்குதல்களை இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. ‘முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே தான் அரசுடன் இணைந்து அரசியல் செய்வதாகவும், அரசுடன் இணைந்து அரசியல் செய்வது எதிர்க்கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிடவும் சிரமமான காரியம்’ என்றும் கூறும் ரவூப் ஹக்கீம், ஒரு நீதியமைச்சராக இருந்தும் தமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறையை தடுக்கமுடியவில்லை.
முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெற்று சிறீலங்கா நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஏனைய முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரையும் தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்தும் சக்தியற்றவர்களாக கடிதம் எழுதுவதிலும், கண்டன அறிக்கை விடுவதிலுமேயே காலத்தைக் கழிக்கின்றனர்.
தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டபோது இந்த முஸ்லீம் தலைமைகள், அதனைத் தடுத்து நிறுத்தவோ எதிர்த்துக் குரல் கொடுக்கவோ முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, பலர் பேரினவாதத்துடன் கரம் கோர்த்து நின்று இனப்படுகொலைக்கும் துணை நின்றனர். ஆனால், விடுதலைப் புலிகளின் பலமே இலங்கைத் தீவு முழுவதும் முஸ்லீம் மக்கள் மீதும் அவர்களது உடமைகள் மீதும் கைவைக்க முடியாத நிலையை சிங்களப் பேரினவாதத்திற்கு ஏற்படுத்தியது. இதனை முஸ்லீம் தலைமைகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லாத இன்றைய வெற்றிடத்தில் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதல்களில் இருந்து முஸ்லீம் மக்கள் நிச்சயமாக இதனை உணர்ந்துகொண்டிருப்பார்கள்.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

கருத்துகள் இல்லை: