வியாழன், 15 ஆகஸ்ட், 2013

குந்தியிருக்க ஒரு சொந்த நிலம்

சுற்றி வர பூவரசம் வேலி……. வடக்கு வேலிக்கப்பால் ஓங்கியுயர்ந்து வளர்திருக்கும் பனங்கூடல்……. தூரத்தே பச்சைக்கம்பளம் விரித்து தென்றலுக்கு தலையாட்டும் எம் வரப்புயர்ந்த வயல்கள்…… முற்றத்தில் பரவிக்காயும் நெல்மணிகளை போட்டிபோட்டு பொறுக்கும் புழுனிகளும் கோழிகளும்…… வெத்திலை உரலை இடித்துக்கொண்டே அவற்றை கலைக்கும் முயற்சியில் திண்ணையிலிருக்கும் கிழவி….. பலாமரத்திலமர்ந்து பாடும் குயில்களும் வேப்பமரத்துக்காகமும்…… பட்டியில் மடி முட்டி தானாகவே பால் சுரக்கும் பசுமாடு…… இவற்றையெல்லாம் விட மழைச்சிதறல்கள் மண்தொடும் வேளை மனம்தொடும் அந்த மண்வாசனை……… ஆம் எம்சொந்த மண்ணின் வாசனை…… அனுபவித்திருக்கிறீர்களா? சொந்த மண்……….. வெறுமனே ஒரு கனியப்பொருட்களின் தொகுப்பல்ல. அது மனிதங்களின் உயிர்மூச்சு.

சொந்த மண்

உப்புக்கடலில் வாழும் மீனை வேறு எந்த நீரில் விட்டாலும் அதற்கு உயிர் வாழத்தெரியாது…… வாழமுடியாது. ஏனென்றால் அந்த கடல் அதன் தேசம் என்பது மட்டுமல்ல மீனுக்கும் கடலுக்கும் இடையிலான ஒரு பிர்க்கமுடியாத நேசம்கூட காரணம். அதேபோலத்தான் எங்களுக்கும் எம்சொந்த மண்ணுக்கும் உள்ள பந்தம். இந்த மண்…….. இந்த வானம்…… இந்த காற்று…….. இந்த கடல்…… இவையெல்லாம் எமது உணர்வுகளுடன் ஒன்றியவை.

உங்கள் கண்ணுக்கு செம்மண்ணாக தெரிவது எங்கள் கண்களுக்கு எமக்காக எமது முன்னோர்கள் சிந்திய குருதி படிந்த கறையாகத்தான் தெரிகிறது. அந்த குருதி படிந்த எம் சொந்த மண் எங்களுக்கு நெற்றித்திலகமாகத்தான் தெரிகிறது. ஊருக்கு வெளியே உள்ள வண்டல் மண் வெறும் மண்ணல்ல அது எமக்காக உரமான எமது முன்னோர்களின் விதைக்கப்பட்ட வித்துடல்களின் சத்து. இந்த காற்றுதான் எங்கள் முப்பாட்டனுக்கு முதல் சுவாசத்தை கொடுத்தது. இதே காற்றுத்தான் அவரது இறுதிப்பெருமூச்சையும் ஏற்றுக்கொண்டது. இதே காற்றுத்தான் எங்களுக்கும் முதல் உயிர்ப்பை தந்தது. முற்றத்து முல்லையின் வாசத்தை எங்கள் சுவாசத்தில் கலந்து விட்ட தோழன்….. முல்லையின் வாசம் மட்டுமல்ல எம் மூதாதையர்களின் எண்ணஅலைகளும் இறுதி மூச்சுகளும் இந்த காற்றில்தான் முக்குளித்துக்கொண்டிருக்கின்றன.

கடலின் அலையோசை எங்களுடைய வரலாற்றுப்பக்கங்களில் கேட்ட இடியோசைகளைத்தான் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. எம் கண்ணீரால்தான் இன்னும் அந்த கடலில் உப்பு கரித்துக்கொண்டேயிருக்கிறது. ஏர் தொட்டவனையும் கடல் நீர் தொட்டவனையும் எம் மண் என்றும் கைவிட்டதில்லை.

சொந்த மண்

பலாலியில் பச்சையுடைகள் ஆள்வைத்து வேளாண்மை செய்து திருநெல்வேலியில் மரக்கறி விற்பதும் எம்மீனவர்களுக்கு கட்டுமரத்தில் எம் கடற்தாயின் மடிதவழவும் அனுமதி அட்டை வேண்டுமென்று கூறிவிட்டு தென்னகத்து றோலர் படகுகள் தேவையானவரை சுருட்டிக்கொள்வதும் அவர்கள் எம்மண்ணில் கண்வைத்து பலகாலம் ஆகிவிட்டதைதான் உணர்த்துகிறது.

ஹிட்லரின் சுயசரிதையில் படித்த அவனது கொள்கைவிளக்கமிது

“ஒரு நாட்டின் மக்கள்தொகை பெருகும் போது அந்த நாட்டிற்கான இயற்கைவளங்களின் தேவையும் அதிகரிக்கிறது. அதை தீர்வு செய்ய இரண்டே வழிகள்தான் உள்ளது. ஒன்று சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் இல்லையேல் வேறுநாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் இயற்கை வளங்களை சூறையாட வேண்டும்.”

எல்லா ஹிட்லர்களது தெரிவும் இரண்டாவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை. யூதர்கள் விரட்டப்பட்டார்கள் அவர்களது மண்ணும் வளங்களும் ஹிட்லருக்கு கிடைத்தது. தமிழர்கள் விரட்டப்படுகிறோம். எங்களது மண்ணும் வளமும் ஏதோவொரு குடியேற்றத்திட்டத்தின் கீழ் ஆக்கிரமிக்கப்படும்.

நிலபுலங்களுடன் வாழ்ந்த எம்மக்களிடம் இந்த போர் சூறையாடியதில் எஞ்சியிருப்பது அசையாசொத்தான காணிகள்தான். முல்லைப்பூ மணக்கும் முற்றமும் கொல்லையில் விளையும் மரக்கறிகளும் திண்ணையில் இருக்கும் மட்குட நீரும் வெண்ணை திரளும் தாழியும் இப்போது இல்லைதான். ஏன் எந்தையும் தாயும் கூடிக்குலாவிய நாற்சார வீடும் எம் பிஞ்சுப்பாதங்கள் பதித்த வாசல்படியும் இனி எங்கே கிடைக்கும்? அத்தனையும் எமக்கு இல்லாதபோதும் நாம் ஏன் எம் சொந்தமண் நாடி வந்திருக்கிறோம்? நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் இருப்பவற்றை கொண்டு இழந்தவற்றை மீட்க எமது மண்வேண்டும். எமது உதிரத்தாலும் உணர்வுகளாலும் உரமூட்டப்பட்ட எமது சொந்த மண்ணால்தான் வெந்து போன எம் மனங்களின் வேதனைகளுக்கு கட்டிட முடியும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான். ஆனால் அதையும் பறித்துக்கொள்வதில் வெகு மும்முரமாக இருக்கிறார்கள். நாங்கள் தோற்றுத்தான் போனோம்….. மழைச்தூறல்களில் வீசும் எம் மண்வாசனை இன்று எம் கண்ணீர்த்தாரையால் வீசுகிறது. மண்வாசனையுடன் அதனுள் புதைக்கப்பட்டிருக்கும் யாரோ சில முகம் தெரியாத சொந்தங்களின் பிணவாசனையையும் உணரத்தான் முடிகிறது.

ஆனால் ஒன்று
“உங்கள் ஆட்சி உங்கள் துப்பாக்கிகள்
எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்


ஆனால் நாளை….காலத்தான் விமர்சனம்
உங்கள் பிணங்களை கூடத் தோண்டியெடுத்து வந்து
தூக்கில் போடும் என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்

கருத்துகள் இல்லை: